முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குற்றவாளிகளை அனுப்ப மறுக்கும் இத்தாலிக்கு கண்டனம்

செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,மார்ச்.20 - மீனவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 2 பேர்களை இந்தியாவுக்கு திரும்ப அனுப்ப மறுக்கும் இத்தாலி அரசுக்கு சோனியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவை ஏமாற்ற எந்த நாடும் அனுமதிக்க முடியாது என்றும் சோனியா காட்டமாக கூறினார்.

கேரள கடலில் மீனவர்கள் 2 பேர் மீன்படித்துக்கொண்டியிருந்தனர். அப்போது சிங்கப்பூரில் இருந்து வந்துகொண்டியிருந்த இத்தாலி நாட்டு சரக்கு கப்பலில் இருந்த பாதுகாவலர்கள் 2 பேர்,மீனவர்களை நோக்கி இயந்திர துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் கேரள மீனவர்கள் 2 பேர் பலியானார்கள். இதுதொடர்பாக இத்தாலி நாட்டு கப்பலில் இருந்த பாதுகாவலர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கேரள கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது. வழக்கு நடைபெற்றுக்கொண்டியிருக்கும்போது அவர்கள் இருவரும் கிறிஸ்துமஸ் கொண்டாட இத்தாலிக்கு அனுப்பப்பட்டனர். கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடிவிட்டு அவர்கள் இருவரும் இந்தியாவுக்கு திரும்பினர். திரும்பவும் அந்த நாட்டு பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்காக இத்தாலிக்கு செல்ல அனுமதி கோரினர். இதற்கு கேரள ஐகோர்ட்டு மறுத்துவிட்டது. இதை எதிர்த்து அவர்கள் இருவரும் சுப்ரீம்கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். அப்போது இத்தாலி நாட்டு தூதர் உத்தரவாதம் அளித்ததின்பேரில் அவர்கள் இருவரும் இத்தாலிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இரண்டாவது தடவையாக இத்தாலி சென்ற அவர்கள் இந்தியாவுக்கு திரும்ப மறுத்துவிட்டனர். மேலும் அவர்களை அனுப்ப இத்தாலி அரசும் மறுத்துவிட்டது. இதனையொட்டி புதுடெல்லியில் உள்ள இத்தாலி நாட்டு தூதர் இந்தியாவை விட்டு வெளியேற சுப்ரீம்கோர்ட்டு தடை விதித்துள்ளது. 

இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியின் பார்லிமெண்டரி கட்சி கூட்டம் நேற்று புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் சோனியா காந்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில் கொலை குற்றவாளிகள் 2 பேர்களை இந்தியாவுக்கு திரும்ப அனுப்ப இத்தாலி மறுத்து வருவதற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்தார். இந்தியாவை ஏமாற்றவோ அல்லது நீதியை மீறவோ எந்த நாடும் அனுமதிக்க முடியாது என்று கடுமையாக கூறினார். 2 கொலை குற்றவாளிகளை அனுப்ப மறுப்பது, நாட்டின் சுப்ரீம்கோர்ட்டிற்கு அளித்த உத்தரவாதத்தை மீறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சோனியா கூறினார். சுப்ரீம்கோர்ட்டுக்கு இத்தாலி அரசு அளித்த உத்தரவாதத்தை மதித்து நடக்க வேண்டும் என்றும் சோனியா கூறினார். 

கொலை வழக்கில் கப்பல் பாதுகாவலர்கள் 2 பேர்களை திருப்ப அனுப்ப இத்தாலி மறுத்து வருவதற்கு காங்கிரஸ் கட்சி மீது எதிர்க்கட்சிகள் கடுமையாக தாக்கிப்பேச ஆரம்பித்தனர். போபர்ஸ் பீரங்கி பேரத்தில் இருந்து இந்திய சட்டத்தை இத்தாலியர்கள் மீறி வருகிறார்கள் என்று காங்கிரஸ் மீது எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டத்தொடங்கியுள்ளனர். இந்தநிலையில் இத்தாலிக்கு சோனியா கடும் கண்டனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தாலியை பூர்வீகமாக கொண்டவர் சோனியா காந்தி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்