முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை சுகுமாரி காலமானார்: திரையுலகினர் அஞ்சலி

செவ்வாய்க்கிழமை, 26 மார்ச் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, மார்ச்.27 - தீ விபத்தால் காயமடைந்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் திரைப்பட நடிகை சுகுமாரி (74),  சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். பழம்பெரும் திரைப்பட நடிகையான சுகுமாரி  நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 74. இவர் மறைந்த இயக்குனர் பீம்சிங் மனைவி ஆவார். இவருக்கு ஒரு மகன் உள்ளார். அவர் வெளிநாட்டில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.  

சென்னை தியாகராயநகரில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்த சுகுமாரி, சில நாட்களுக்கு முன்னர் விளக்கு ஏற்றும்போது, அவரது புடவையில் தீ பிடித்து, உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர், பெரும்பாக்கத்தில் உள்ள, தனியார் மருத்துவமனை ஒன்றில், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

 

இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் சுகுமாரி நேற்று காலமானார். அவரது மறைவுக்கு தமிழ், மலையாளத் திரையுலகினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். பலர் அவரது வீட்டிற்கு சென்று மலர் அஞ்சலி செலுத்தினர். இன்று கண்ணம்மாபேட்டை சுடுகாட்டில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.

 

பாசமலர், பட்டிக்காடா பட்டணமா, வசந்த மாளிகை சம்பூரண ராமாயனம், பந்தபாசம்,வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழ், மலையாளம், ,இந்தி மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். 74 வயதான சுகுமாரி 1938ம் வருடம் நாகர்கோவிலில் பிறந்தவர் ஆவார். நம்மகிராமம் படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகை விருது பெற்றார்.

மேலும் மாநில அரசின் விருதுகளையும் பத்மஸ்ரீ விருதையும் பெற்றவர். எம்.ஜி.ஆர்.,சிவாஜி படங்களில் மட்டுமின்றி ரஜினி, கமல்,விஜய், சூர்யா என பல தலைமுறை நடிகர்களோடு நடித்தவர் சுகுமாரி என்பது குறிப்பிடத்தக்கது. தனது 10 வயதில் நடிக்கத்துவங்கியவர் சுகுமாரி. கடந்தசில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் ஜெயலலிதா, இவர் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனைக்கே நேரில் சென்று அவரிடம் நலம் விசாரித்தார். அவரது குடும்பத்தாரிடமும் நலம் விசாரித்தார். சுகுமாரி மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்