முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமன்வெல்த் போட்டியில் ஊழல் - கல்மாடி கைது

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஏப்.26 - காமன்வெல்த் நாடுகளுக்கான விளையாட்டு போட்டி கமிட்டியின் தலைவர் சுரேஷ் கல்மாடி நேற்று சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டுள்ள சுரேஷ் கல்மாடி இன்று டெல்லியில் உள்ள பாட்டியாலா சி.பி.ஐ.கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். 

டெல்லியில் கடந்த அக்டோபர் மாதம் காமன்வெல்த் அமைப்பில் உள்ள நாடுகளுக்கான விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்துகொண்டன. விளையாட்டு போட்டிகளில் இந்திய வீரர்கள் சாதனையை ஏற்படுத்தினர். அதேசமயத்தில் விளையாட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் கமிட்டி தலைவர் சுரேஷ் கல்மாடி தலைமையில் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை செய்வதில் ஊழல் நடப்பதாக தமிழகத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் மணி சங்கர் அய்யர் வெளிப்படுத்தினார். இதனையடுத்து சுதாரித்துக்கொண்ட மத்திய அரசு ஊழல் நடந்திருப்பதாக கூறப்படுவது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. விசாரணையில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பது தெரியவந்தது. லண்டனில் இருந்து விளையாட்டு ஜோதி கொண்டுவர காண்ட்ராக்ட் கொடுத்தது. விளையாட்டு போட்டிகளை தொலைபேசியில் ஒளிபரப்ப காண்ட்ராக் கொடுத்தது மற்றும் விளையாட்டு போட்டிக்கு வந்த வீரர்கள் தங்க அடுக்கமாடி குடியிருப்புகள் கட்டியது. விளையாட்டு அரங்குகள்,சாலைகள் அமைக்க தரமற்ற பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கியது தலைநகர் டெல்லியை அலங்கரித்தது உள்பட பல்வேறு நடவடிக்கைகளில் பெருமளவு ஊழல் நடந்திருப்பது தெரியவந்தது. இதனையொட்டி கல்மாடி மற்றும் கமிட்டியில் உள்ள இதர உறுப்பினர்கள் ஆகியோர் வீடுகள், அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய தஸ்தாவேஜூகள் சிக்கின. மேலும் கல்மாடியை நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் அலுவலகத்திற்கு வரச்செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் ஊழல் செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்ததால் அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். டெல்லியில் உள்ள பாட்டியாலா சி.பி.ஐ. கோர்ட்டில் சுரேஷ் கல்மாடி ஆஜர்படுத்தப்படுவார் என்று சி.பி.ஐ.யின் செய்தி தொடர்பாளர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். சுரேஷ் கல்மாடியை சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதிக்கும் என்று தெரிகிறது. 

இதற்கிடையில் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவியில் இருந்து சுரேஷ் கல்மாடியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்