முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நடிகர்கள் உண்ணாவிரதம்

செவ்வாய்க்கிழமை, 2 ஏப்ரல் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஏப்.3 - இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகநேற்று தென்னிந்திய திரைப்பட நடிகர்கள்  ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈபட்டனர். தமிழக சட்டமன்றத்தில் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவும் ஈழம் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தவும் தீர்மானம் நிறைவேறியுள்ளது.

இந்நிலையில் இலங்கை போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு பாதுகாப்பும், வாழ்வாதாரத்தையும் உறுதி செய்ய வலியுறுத்தி, தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள்  சென்னை தி.நகரில் அபிபுல்லா சாலையில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில்   நேற்று காலை 9 மணிக்கு காலை உண்ணாவிரதத்தினை துவக்கினர். 

நடிகர் சங்க தலைவர் சரத்குமார் உண்ணாவிரதத்துக்கு தலைமை தாங்கினார். நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி, துணைத் தலைவர் விஜயகுமார், பொருளாளர் வாகை சந்திரசேகர் முன்னிலை வகித்தனர். 

நடிகர் சரத்குமார் பேசுகையில், கடந்த 2008 ஆம் ஆண்டு இலங்கை தமிழர்களுக்கு உண்ணாவிரதம் இருந்தோம். தற்போது உண்ணாவிரதம் இருக்கிறோம். அங்கே இருப்பவர்கள் நம் தொப்புள்கொடி உறவுகள், அவர்கள் கொல்லப்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ராஜபக்சே மீது போர் குற்ற நடவடிக்கை எடுக்க, பல்வேறு போராட்டங்கள் தமிழகம் முழுவதும் நடக்கிறது. இதற்காக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு எங்கள் சங்கம் முழு ஆதரவு தருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் காலை 9 மணிக்கு உண்ணாவிரத பந்தலில் வந்து அமர்ந்தனர். அதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜீத், பிரபு உள்ளிட்ட நடிகர்கள் கலந்து கொண்டனர். ஆனால் விஜய் மட்டும் வரவில்லை. 

இதுகுறித்து நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரிடம் கேட்டபோது, தலைவா பட ஷூட்டிங்குக்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளார் விஜய். அதனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை, என கடிதம் அனுப்பியுள்ளார் என்றார். நடிகர்கள் சத்யராஜ், கருணாஸ், மனோபாலா, வி.எஸ்.ராகவன், இயக்குனர் வஸந்த், அர்ஜூன், கே.பாக்கியராஜ், கருணாஷ், பாண்டிராஜ், சார்லி, ஜீவா, ஜித்தன் ரமேஷ், ஒய்.ஜி.மகேந்திரன், மற்றும் நடிகைகள் ராதிகா, கோவை சரளா, நளினி, ரேகா, ஊர்வசி, திரிஷா, லட்சுமி ராய், நமீதா, மோனிகா, தன்ஷிகா   உள்பட முன்னணி நடிகர், நடிகைகள் கலந்து கொண் டனர். தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை , தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், கில்டு திரைப்பட இயக்குனர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், விநியோகஸ்தர் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் போன்ற திரையுலகின் அனைத்து சங்கத்தினரும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார்கள். 

இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்த நடிகர்கள் தெரிவித்த கருத்து வருமாறு:-

விசால்:- இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உரிமைகள் கிடைக்க வேண்டும். மத்திய அரசு இதில் தலையிட்டு தமிழர்களின் மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

நாசர்:- இலங்கை தமிழர்களுக்காக உலகம் முழுவதும் மக்கள் ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர். நடிகர் சங்கமும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளது. இலங்கை தமிழர்களின் கோரிக்கையான தமிழ் ஈழம் எப்போதோ அமைந்து இருக்க வேண்டும். இவ்வளவு உயிர்ச் சேதம் ஏற்பட்ட பிறகும் அவர்கள் கோரிக்கை நிறைவேறாதது வருத்தம் அளிக்கிறது. இந்த எழுச்சி உலகத்தின் காதுகளில் விழும். இனியாவது விடியல் ஏற்படட்டும்.

பிரகாஷ்ராஜ்:- மனிதர்களின் அடிப்படை உரிமையை பறிப்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை. இலங்கையில் நடந்துள்ளது மோசமான செயல்பாடுகள். தமிழ் இனம் அழிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக மாணவர்கள் நடத்தும் போராட்டத்தை விட்டுவிட வேண்டும். இலங்கை மக்களுக்கு விடியல் ஏற்படட்டும். இலங்கை பிரச்சினை தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு ஏற்று செயல்படுத்த வேண்டும். அதுவரை போராட்டம் நீடிக்கும்.

கோவை சரளா:- இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட தமிழகம் முழுவதும் மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். உரிமைக்காகவே இப்போராட்டம், ஈழ தமிழ் மக்களுக்கு விடிவு ஏற்பட வேண்டும்.

பரத்:- இலங்கை தமிழர்கள் நம் உடன்பிறப்புக்கள். அவர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது. மத்திய அரசு தலையிட்டு மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு தெரிவித்தனர். 

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

மாலை 5 மணிக்கு உண்ணாவிரதம் முடிந்தது. நடிகர், நடிகைகள் பழம் ரசம் குடித்து, உண்ணாவிரதத்தை முடித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்