முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோசடி: வி.சி.குகநாதன் மீது அமீர் குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஏப்.12 - தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் கூட்டுறவு சங்கத்திலிருந்து ஒரு கோடியே இருபத்தைந்து லட்சம் ரூபாய் தொகையை முன்னாள் பெப்ஸி தலைவர் வி.சி.குகநாதன் மோசடி செய்து விட்டார் என்று நேற்று பெப்ஸி தலைவர் அமீர் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:-

கடந்த ஆட்சியில் பெப்ஸி தலைவராக வி.சி.குகநாதன் பதவி வகித்தார். அப்போது பெப்ஸி உறுப்பினர்களுக்கு பையனூரில் வீடுகட்டி தருவதாக கூறி பெப்ஸிக்காக செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கத்தின் மூலம் அதன் உறுப்பினர்களிடம் தலா ரூ.3100 பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு இரவோடு இரவாக வி.சி.குகநாதன் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு என் தலைமையில் பெப்ஸி செயல்பட்டு வருகிறது. பெப்ஸிக்காக உருவாக்கப்பட்ட கூட்டுறவு சங்கமும் எங்கள் தலைமையின் மேற்பார்வையில் செயல்பட வேண்டும்.

இது நாள் வரை அப்படி செயல்படவில்லை. ராஜினாமா செய்த வி.சி.குகநாதன் கூட்டுறவு சங்கத்தின் சாவியையும், அதன் கணக்கையும் எங்களிடம் ஒப்படைக்கவில்லை. இந்த சூழலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பெப்ஸி கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெற வேண்டும் என்பது விதி. இந்த தேர்தல் நடத்துவதற்காக இரண்டு தினங்களுக்கு முன்பு தேர்தல் அதிகாரி பழனி என்பவரிடம் தேர்தல் பற்றி  பேசிய போது விரைவில் தேதி அறிவிக்கப்படும் என்று கூறினார்.

இதே பதிலை கூட்டுறவு சங்க எஸ்.ஓ.சித்தார்த் கூறினார். நாங்கள் வந்து விட்டோம். கடந்த 9 -ம் தேதி கூட்டுறவு சங்கம் சென்ற போது நடக்க வேண்டிய தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. 9 பேர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என்று அதன் விபரத்தை விளம்பர பலகையில் ஒட்டி விட்டு அலுவலகத்தை மூடிவிட்டு சென்று விட்டார்கள். இது மிகவும் தவறான செயல். வி.சி.குகநாதனின் இந்த செயலுக்கு அரசு அலுவலர்கள் துணை போய் இருக்கிறார்கள். சட்டப்படி நடக்க வேண்டிய தேர்தல் நடக்காமலேயே நடந்ததாக கூறுவது கண்டிக்கத்தக்கது. வீடு கட்ட வசூலிக்கப்பட்ட ஒரு கோடியே இருபத்தைந்து லட்சம் பணத்தையும் வி.சி.குகநாதன் மோசடி செய்திருக்கிறார். 

இது குறித்து முறை கேடுகளை தமிழக முதலமைச்சரிடம் எடுத்து சொல்ல இருக்கிறோம். இது தொடர்பாக அமைச்சர்களுக்கும் தெரிவித்து இருக்கிறோம். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் வி.சி.குகநாதன், மற்ற இரண்டு அரசு அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு நீதிமன்றத்தில் தொடரப்படும். இவ்வாறு அமீர் கூறினார். அப்போது பெப்ஸி நிர்வாகிகள் சி.சிவா, குமார், தனபாலன், ராமு, சுந்தர் என பலர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்