முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

20 ரூபாய்க்கு அரிசி திட்டம்: முதல்வர் தொடங்கி வைக்கிறார்

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2013      அரசியல்
Image Unavailable

சென்னை, ஏப். 17 - தமிழ்நாட்டில் வெளிச்சந்தையில் விற்கப்படும் அரிசி விலை சமீப காலமாக மிகவும் உயர்ந்தபடி உள்ளது. இது ஏழைகள், நடுத்தர மக்களை பெரிதும் பாதிப்பதாக உள்ளது. இதை அறிந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, குறைந்த விலையில் அரிசி விற்பனை செய்யும் திட்டத்தை கொண்டு வர முடிவு செய்தார். சட்டசபை கூட்டத்தொடர் சமீபத்தில் தொடங்கிய போது, ஏழைகள், நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் கடைகளில் ஒரு கிலோ அரிசி 20 ரூபாய்க்கு விற்கப்படும் என்று அறிவித்தார். விரைவில் இந்த திட்டம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த புதிய திட்டம் இன்று (புதன்கிழமை) தொடங்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகிறார்கள். இன்று காலை 9.30 மணிக்கு நந்தனம் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக கிடங்கு வணிகத்தில் இதற்கான விழா நடக்கிறது.

நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டு 20 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கி திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அமுதம் அங்காடிகள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் சிறப்பு அங்காடிகளில் இந்த 20 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி நாளை முதல் வழங்கப்படும்.

முதல் கட்டமாக சென்னை நகரில் நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் இயங்கும் 50 ரேஷன் கடைகளிலும், கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் 50 ரேஷன் கடைகளிலும் 20 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி விற்பனை செய்யப்படும். 5 கிலோ, 10 கிலோ, 25 கிலோ கொண்ட பைகளில் அரிசி அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வால் வெளிச்சந்தையில் அரிசி விலை கிலோ ரூ.50 முதல் ரூ.55 வரை உயர்ந்து விட்டது.

இன்று முதல் ரேஷன் கடைகளில் 20 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி விற்கப்படுவதன் மூலம் ஏழைகள் மிகவும் பயன் அடைவார்கள். ஏழைகளுக்கு வரப்பிரசாதம் அளிக்கும் உன்னதமான திட்டமாக இது அமைந்துள்ளது. ஏற்கனவே ரேஷன் கடைகளில் ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இன்று முதல் உயர்ரக அரிசியும் கிலோ ரூ.20 விலைக்கு கிடைப்பதால் இந்த திட்டமும் ஏழை, நடுத்தர வர்க்கத்தினருக்கு பயனுள்ளதாக இருக்கும்.

சமீபத்தில் சென்னை மாநகராட்சியில் 20 வார்டுகளில் அம்மா உணவகம் தொடங்கப்பட்டு மலிவு விலையில் இட்லி, சாம்பார் சாதம், தயிர் சாதம் விற்பனை செய்யப்படுகிறது. இந்த திட்டத்தால் ஏழைகள் மற்றும் தொழிலாளர்கள் பயன் அடைந்து வருகிறார்கள்.

அதே போல் 20 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி திட்டமும் ஏழைகள் நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் விலைவாசி உயர்வில் இருந்து அவர்களை மீட்டெடுக்கும் திட்டமாகவும் இது இருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்