முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அலுவலர் குடியிருப்புகள் புதுப்பிக்கப்படும்: அமைச்சர்

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.17 - 27 மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலர் வாடகை குடியிருப்புகள் புதுப்பிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஆர்.வைத்தியலிங்கம் அறிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மான்யக் கோரிக்கை விவாதத்திற்குப் பிறகு அமைச்சர் ஆர்.வைத்தியலிங்கம் அவிவிப்பு விவரம் வருமாறு:-

27 மாவட்டங்களில் உள்ள 11,327 அரசு அலுவலர் வாடகைக் குடியிருப்புகளுக்கு 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பழுதுபார்த்தல் மற்றும் புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்படும். இப்பணிகள் மாநில அரசின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகைக் குடியிருப்புகள் மொத்தம் 25,421 உள்ளன. இவற்றுள் சென்னை நீங்கலாக இதர மாவட்டங்களில் 3,112 குடியிருப்புகள் காலியாக உள்ளன. தற்போது காலியாக உள்ள 3,112 தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகைக் குடியிருப்புகளை உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வாடகைக்கு ஒதுக்கீடு செய்யப்படும். 

1971 இல் கட்டப்பட்ட தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணைய அலுவலக கட்டடம் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இணைய நிதியிலிருந்து புதுப்பிக்கப்படும். அப்போது வைப்பீடுகள் பெறுவதற்கும் நகைக்கடன் வழங்குவதற்கும் வங்கிகளில் உள்ளது போன்று தனித்தனி வங்கி முகப்புகள் அமைக்கப்படும். 

முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி சென்னை, கோவை, திருச்சிராப்பள்ளி, மதுரை, சேலம், திருநெல்வேலி, தூத்துக்குடி, ஈரோடு மற்றும் கரூர் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள 10,000 தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பழுதுபார்த்தல் மற்றும் புதுப்பித்தல் பணிகள் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாநில அரசின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும். 

திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர் மற்றும் நாகர்கோவில் கூட்டு உள்ளூர் திட்டப் பகுதிகள் விரிவாக்கப்படும். கூட்டு உள்ளூர் திட்டப் பகுதிகள் விரிவாக்கப்படுவதன் மூலம் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் சேர்த்து திட்டமிட்ட வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் முழுமைத் திட்டம் தயாரிக்கப்படும். 

பேரணாம்பட்டு, காங்கேயம், வெள்ளக்கோவில், கூடலூர் (தேனி மாவட்டம்) ஆகிய நகராட்சிப் பகுதிகள் புதிய தனித்த உள்ளூர் திட்டப் பகுதிகளாக அறிவிக்கப்படும். இப்பகுதிகளில் திட்டமிட்ட வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் முழுமைத் திட்டம் தயாரிக்கப்படும். 

கிருஷ்ணகிரி மற்றும் ஊட்டி தனித்த உள்ளூர் திட்டப் பகுதிகள் கூட்டு உள்ளூர் திட்டப் பகுதிகளாக அறிவிக்கப்படும். இதன் மூலம் முறையற்ற நகர வளர்ச்சியை தடுக்க முடியும். அருகிலுள்ள பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிப் பகுதிகள் இணைக்கப்படுவதால் திட்டமிட்ட வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் முழுமைத் திட்டம் தயாரிக்கப்படும். 

செங்கல்பட்டு மண்டல துணை இயக்குநர் அலுவலகத்தை பிரித்து திருவள்ளூரில் ஒரு மண்டலத் துணை இயக்குநர் அலுவலகம் மற்றும் தற்போது திருச்சி மண்டல துணை இயக்குநரின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கரூர் உள்ளூர் திட்டக் குழுமத்திற்கு தனியே கரூரில் ஓர் அலுவலகம் ஆகியவை புதிதாக உருவாக்கப்படும். இவ்வலுவலகங்களுக்கான பணியாளர்கல் பணி நிரவல் மூலம் நியமிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்