முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாநகராட்சி கூட்டத்தில் கருணாநிதிக்கு கண்டனம்

புதன்கிழமை, 17 ஏப்ரல் 2013      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஏப்.18 - சென்னை விமான நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் வைக்க எதிர்ப்பு தெரிவித்த கருணாநிதிக்கு மதுரை மாமன்ற கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. எம்ஜிஆர் பெயரை வைக்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  மதுரை மாநகராட்சி கூட்டம் மேயர் ராஜன்செல்லப்பா தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் ஆணையாளர் நந்தகோபால், துணை மேயர் ஆர்.கோபாலகிருஷ்ணன், மண்டல தலைவர்கள் பெ.சாலைமுத்து, கே.ஜெயவேல், கே.ராஜபாண்டி மற்றும் அனைத்து கட்சி கவுன்சிலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் மேயர் ராஜன்செல்லப்பா முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் கொண்டு வந்தார். அந்த நேரத்தில் திமுக கவுன்சிலர்கள் கருப்பு சட்டை அணிந்து மாமன்றத்துக்குள் வந்தனர். முதல்வர் ஜெயலலிதா மதுரை மாநகராட்சியில் கருணை அடிப்படையில் 247 பேருக்கு வேலை வாய்ப்பு அளித்ததற்கும்,சித்திரை முதல்நாளை தமிழ்புத்தாண்டாக மீண்டும் அறிவித்து தமிழுக்கு சுதந்திரம் வாங்கி தந்ததற்கும், மதுரையில் ரூ.130 கோடியில் 2 உயர்மட்ட பாலம் அமைக்க உத்தரவிட்டதற்கும், மேலும் மதுரை அருகே துணைநகரம் அமைப்பதற்கு அறிவிப்பை வெளியிட்டதற்கும் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  இதையடுத்து சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் 2வது முனையத்திற்கு எம்ஜிஆர் பெயரை சூட்ட வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அதே நேரத்தில் விமான நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை வைப்பதற்கு கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சட்ட சபையில் தீர்மானத்தை மு.க.ஸ்டாலின் ஆதரித்து பேசிவிட்டு வெளியே வந்து எதிர்ப்பதாக கூறியுள்ளார். இதே போல் திமுக தலைவர் கருணாநிதியும் எல்லா பிரச்சினையிலும் இரட்டை வேடம் போடுவது போல் இதிலும் இரட்டை வேடம் போட்டுள்ளார். இதை கண்டிப்பதாகவும் கூறினார். 

   இதை தொடர்ந்து திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து எழுந்து நின்று கூச்சல் போட்டனர். கருணாநிதியை பற்றி ஏன் பேசுகிறீர்கள் என கேட்டனர். இதற்கு அதிமுக கவுன்சிலர்களும் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து மாமன்றத்தில் கூச்சல் போட்டு கொண்டிருந்ததால் திமுக கவுன்சிலர்களை வெளியேற்றும் படி மேயர் உத்தரவிட்டார். நீங்கள் ஏதாவது பிரச்சினை செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலேயே கருப்பு சட்டை அணிந்து கூட்டத்திற்கு வருகிறீர்கள். நீங்கள் வந்ததுமே உங்களை வெளியேற்றி இருக்க வேண்டும் என்றார். இதை தொடர்ந்து திமுக கவுன்சிலர்கள் கோஷமிட்டபடி மாமன்றத்தில் இருந்து வெளியேறினர்.

   இதை தொடர்ந்து விவாதம் தொடர்ந்து நடந்தது. மதுரை தெற்கு மண்டல தலைவர் பெ.சாலைமுத்து பேசும் போது, மதுரை மாநகராட்சியில் புதிதாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். 43 டிரைவர்கள் பல ஆண்டுகளாக மாநகராட்சியில் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்களுக்கு முன்னுரிமை அளித்து பணி நியமனம் செய்ய வேண்டும். வரை படஅனுமதியை உதவி கமிஷனர் வழங்க அனுமதி அளிக்க வேண்டும். அம்மா திட்டம் நல்ல முறையில் செயல்படுகிறதா என்பதை அறிய குழு அமைக்கப்பட வேண்டும். மண்டல தலைவர்களுக்கு உரிய அதிகாரத்தை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்றார்.

மேயர்- இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

கே.ராஜபாண்டியன்(மேற்கு மண்டல தலைவர்) மதுரை மாநகராட்சியில் அம்மா திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது பொதுமக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்திற்கு மண்டலத்தில் உள்ள வாகனங்கள் பயன்படுத்தப்படுவதால் மற்ற பணிகள் பாதிக்கப்படுகிறது. எனவே கூடுதல் வாகனங்களை ஒதுக்க வேண்டும். மதுரை மாநகராட்சிக்குஉட்பட் அரசு மருத்துவமனைகளுக்கு ஒரு ஆம்புலன்ஸ் மட்டுமே உள்ளது. எனவே ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு ஆம்புலன்ஸ் வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரூ.5 லட்சம் மதிப்பிலான பணிகளை செய்ய மண்டல அளவிலேயே அதிகாரம் உள்ளது. அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

மேயர் - இது குறித்து உரிய முடிவுகள் எடுக்கப்படும்.

கே.ஜெயவேல்(வடக்கு மண்டல தலைவர்) கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ளும் கவுன்சிலர்களுக்கு படித்தொகை ரூ.800 வழங்கப்படுகிறது. அதை ரூ. 2 ஆயிரமாக உயர்த்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 மேயர் - உங்கள் கோரிக்கையை  அரசிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது. மேலும் மதுரை 50வது வார்டில் தினசரி மார்க்கெட்டில் நீர்தொட்டி கட்டுவது, வைகை குடிநீர் திட்ட பராமரிப்பு ஊழியர்களை தினக்கூலிகளாக நியமிப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

திமுக கவுன்சிலர்களுக்கு இலவச சட்டை வழங்க  தயார் -மேயர்

 

மாமன்ற கூட்டம் நடந்து கொண்டிருந்த போது திமுக கவுன்சிலர்கள் க ருப்பு சட்டை அணிந்து வந்தனர். அப்போது பேசிய மேயர் மாமன்ற கூட்டத்திற்கு நீங்கள் கருப்பு சட்டை அணிந்து வந்து களங்கம் ஏற்படுத்துகிறீர்கள்.உங்களிடம் வெள்ளை சட்டை இல்லை என்றால் மாமன்றம் சார்பில் உங்களுக்கு வெள்ளை சட்டை இலவசமாக வழங்க தயார் என்று மேயர் கூறியதும், மாமன்றத்தில் சிரிப்பலை எழுந்தது.

 

மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி

 

மதுரை மாநகராட்சியின் கீழ் இயங்கும் 66 பள்ளிகளில் தற்போது 4 பள்ளிகளில் மட்டுமே ஆங்கில வழி கல்வி முறை உள்ளது. மாநகராட்சி பள்ளியில்  படிக்கும் ஏழை மாணவ, மாணவிகள் ஆங்கில வழி  கல்வி முறையில் பயன்பெறுவதற்காக 20ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகள், 20 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி முறையை நடைமுறைப்படுத்த அரசிடம் அனுமதி கோர மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்