முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை அழகர்கோவில் உண்டியல் மொத்த வசூல் ரூ. 46 லட்சம்

வெள்ளிக்கிழமை, 29 ஏப்ரல் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை,ஏப்.29 - மதுரையில் சித்திரை திருவிழா நடந்து முடிந்ததையொட்டி கள்ளழகர் கோயில் உண்டியல்கள் நேற்று திறந்து எண்ணப்பட்டன. மதுரை சித்திரை திருவிழா கடந்த 7 ம் தேதி தொடங்கி 2 வார காலமாக நடைபெற்று வந்தது. மேலும் பக்தர்களுக்கு ஆசி வழங்க கள்ளழகர் மதுரை வந்தார். அவரை பின்தொடர்ந்து 20 உண்டியல்கள் கொண்டு வரப்பட்டன. அதில் லட்சக்கணக்கான பக்தர்கள் தங்களது காணிக்கைகளை செலுத்தினர். 

இந்த உண்டியல்களை எண்ணும் பணி கள்ளழகர் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டப வளாகத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. 20 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் ரூ. 35 லட்சத்து 30 ஆயிரத்து 146 ரொக்கப் பணமும், 18 கிராம் தங்கமும், 79 கிராம் வெள்ளியும், வெளிநாட்டு கரன்சிகளும் இருந்தன. இதே போல் கள்ளழகர் கோயிலில் இருக்கும் நிரந்தர உண்டியல்களும் எண்ணப்பட்டன. 

இதில் ரூ. 10 லட்சத்து 29 ஆயிரத்து 745 ம், தங்கம் 99 கிராமும், வெள்ளி 83 கிராமும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். இதில் மொத்தம் ரூ. 46 லட்சம் கோயிலுக்கு காணிக்கையாக கிடைத்துள்ளது. கடந்த ஆண்டை விட ரூ. 4 லட்சம் அதிகம் கிடைத்துள்ளது என கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோயில் உண்டியல்கள் எண்ணிக்கையின் போது நிர்வாக அதிகாரி கல்யாணி, உதவி அதிகாரி ராமச்சந்திரன், கண்காணிப்பாளர் பகவதி, ஆய்வாளர் உமாமகேஸ்வரி மற்றும் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்