முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இயக்குநர் சங்க கட்டடம்: கே.பாலசந்தர் திறந்து வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 7 மே 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, மே.8 - தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்துக்கு சொந்தக் கட்டடத்தை இயக்குநர் கே.பாலசந்தர் திங்கள்கிழமை திறந்து வைத்தார். தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கான சொந்தக் கட்டடத்தை சென்னை, வளசரவாக்கத்தில் திறந்து வைத்து அவர் பேசியதாவது:-

என்னால் நிறைவேற்ற முடியாத கனவு இப்போது நிறைவேறி இருக்கிறது. இது மிகவும் பிரம்மிப்பாக இருக்கிறது. தமிழ்த் திரைப்படம் இப்போது கோடம்பாக்கத்தில் இருந்து வளசரவாக்கத்துக்கு வந்துவிட்டது. இந்த நேரத்தில் இதற்கு காரணமாக இருந்த நம் முன்னோர்களை மரியாதையோடு நினைத்துப் பார்க்க வேண்டும். தாசரி போன்றவர்கள் இந்த சங்கம் தொடங்க காரணமாக இருந்தவர்கள். நமக்குள் எப்போதும் ஒற்றுமை அவசியம். இப்போது தமிழ்த் திரைப்படம் இளைஞர்கள் கையில் இருக்கிறது. இப்போதெல்லாம் 20, 25 வயதிலேயே இயக்குநர்கள் ஆகிவிடுகிறார்கள். நான் திரைப்படத்துக்கு வரும்போது இரண்டு, மூன்று பேர்தான் சின்ன வயசு இயக்குநர்கள் இருந்தார்கள். ஆனால், இப்போது இளம் வயதிலேயே ரொம்ப வித்தியாசமாக படம் பண்ண வர்றாங்க, பெருமையாக இருக்கு.

இந்தக் கட்டடத்தின் வளர்ச்சியை திறம்பட எடுத்து செய்த இயக்குநர் அமீருக்கு என் வாழ்த்துகள். அமீரோடு அவருக்கு துணையாக இருந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனுக்கும் இந்தத் தருணத்தில் நன்றி சொல்கிறேன். எல்லோரும் ஒற்றுமையாக இருந்து பல சிறப்பான திரைப்படங்களைத் தந்து, தமிழ்த் திரைப்படத்தை பெருமை அடைய வைக்கணும் என்றார் கே.பாலசந்தர்.

2400 சதுர அடி கட்டடம்: படைப்பகம் என்ற பெயரில் இயக்குநர் சங்கக் கட்டடம் வளசரவாக்கத்தில் 2400 சதுர அடியில் மூன்று தளங்கள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் தரைதளத்தில் மருத்துவ பரிசோதனை நிலையமும், முதல்தளத்தில் தலைவர், செயலாளர் அறை, ஆலோசனைக்கூட்டம், வரவேற்பு அறை, அலுவலக அறை, நூலக அறை போன்றவையும், இரண்டாவது தளத்தில் வரவேற்பு அறை, விவாத அறை, கலை அரங்கம் போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக திறப்பு விழாவில் இயக்குநர்கள் பாலுமகேந்திரா, கே.எஸ்.ரவிக்குமார், அமீர், ஜனநாதன், செல்வமணி, கவுதம் மேனன், மணிவண்ணன், பிரபுசாலமன், விஜய், கரு.பழனியப்பன், துரை, சுப்ரமணிய சிவா, அஸ்லாம், சீனு ராமசாமி, தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, பி.எல்.தேனப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்