முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர் குற்றவாளிகளை விசாரிக்க இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்-இ.கம்யூ.,

வெள்ளிக்கிழமை, 29 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஏப்.- 30 - போர் குற்றவாளிகளை விசாரிக்க இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றும், தமிழ் மக்கள் அநியாயமாக கொல்லப்பட்டதற்கு நீதி கேட்கும் இந்த போராட்டத்தில் அணி திரள வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட்  கட்சி கூறியுள்ளது.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மனித உரிமை மீறல்கள், போர்க்காலத்தின்போது சர்வதேச சட்ட நெறிகளை மீறி இழைக்கப்பட்ட கொலைகள், குடிமக்கள் மீதே முப்படையை ஏவி குண்டு வீசிக் கொன்றது, குடியிருப்புக்கள், மருத்துவ மனைகள், கல்வி நிலையங்கள், தொழுகை நிலையங்களின் மீதும் ராணுவத் தாக்குதல் நடத்தி அழித்தது போன்ற பல குற்றச்சாட்டுக்கள் பற்றி வந்த புகார்களை விசாரித்து  ஆதாரம், தடயங்களைச் சேகரித்த ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமைக்கான குழு, ஐ.நா. சபைக்கு, போர்காலக் குற்றங்களை விசாரித்து நீnullதி வழங்கிடக் கோரி அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.
இந்த அறிக்கையை உறுப்புநாடுகளில் ஒன்று விசாரிக்குமாறு வலியுறுத்தி ஐ.நா.வின் ஒப்புதலைப் பெற வேண்டும். அத்துடன் இலங்கை அரசும் பகிரங்க விசாரணைக்கு ஒப்புதல் தெரிவிக்க வேண்டும்.
1950 களில் தொடங்கிய இலங்கை வாழ் தமிழ் பேசும் குடிமக்கள், மனித உரிமை, ஜனநாயக உரிமைகளைக் கோரி பலவகை இயக்கங்களை நடத்தி வந்துள்ளனர். இலங்கை அரசு, இனச் சிக்கலைத் தீர்க்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காததோடு, ஒடுக்குமுறை நடவடிக்கைகளை ஏவியதால், 2007 முதல் 2009 வரையில், அது ஒரு உள்நாட்டுப் போராக மாற்றமடைந்தது.
பயங்கரவாதத்தை ஒழிக்கும் போர் எனப் பிரகடனப்படுத்தி, முப்படைகளையும், இலங்கைத் தமிழ் மக்களை ஒடுக்கப் பயன் படுத்தப்பட்டது. பிறநாட்டு ராணுவ தளவாட உதவிகளையும் இலங்கை அரசு பெற்றுப் பயன்படுத்தி வந்தது.
இலங்கைத் தமிழ் மக்கள் வாழும் பகுதிகள் முற்றுகையிடப்பட்டு, முப்படைத் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டது. சில லட்சம் தமிழ் மொழி பேசும் குடிமக்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டனர்.
2009 இறுதிக்கட்டத்தில், தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்காகப் போராடி வந்த போராளிகள், ஆயுதங்களைப் பயன்படுத்துவதைக் கைவிட்டு, போர் நிறுத்தத்திற்கும், சமரசப் பேச்சுவார்த்தைக்கும் தூது அனுப்பி, செஞ்சிலுவைச் சங்கத்தினரின் வாகனத்தில், வெள்ளைக் கொடியுடன் சென்ற, நடேசன் எனும் போராளியை, நடுவழியில் ராணுவம் நிறுத்திச் சுட்டுக் கொன்றது.
அவரது மனைவி சிங்களப் பெண் என்பதால், அவரையும் தமிழனை மணந்ததற்காகக் கொன்று துண்டு  துண்டாக உடம்பை வெட்டி வீசியதையும், விசாரணைக் குழு சுட்டிக் காட்டியிருக்கிறது.
அதே நாளில், பெரும் தாக்குதல் நடக்கப் போவதால், பாதுகாப்பு முகாமுக்கு வருமாறு அழைக்கப்பட்டதால் வந்து கூடிய 40,000 குடிமக்கள் மீது குண்டுகளைப் போட்டு அனைவரையும் கொன்றழித்ததும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இவற்றை இலங்கை அரசு மறுக்கலாம், இந்திய அரசு தெரியாது எனக்கூறலாம்... ஆதாரங்கள் கேட்கலாம்... எனவே தான், ஐ.நா.சபையின் மேற் பார்வையில் ஒரு பகிரங்க விசாரணைக் குழுவை அமைத்து, சம்பந்தப் பட்டவர் யாராக இருந்தாலும் அனைவரையும் விசாரித்து தீர்ப்பு வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கை உலக அளவில் எழுந்துள்ளது.
இந்திய அரசைப் பொறுத்தமட்டில், அது தொடர்ந்து இலங்கை அரசுக்கு ஆயுத தளவாடங்களை வழங்கி வந்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த சகல கட்சிகளும், தமிழ்நாடு சட்டமன்றமும் விடுத்த    போர்க்கருவிகளை தர வேண்டாம் என்ற கோரிக்கையை இந்திய அரசு ஏற்கவே இல்லை.
சர்வகட்சி தூதுக்குழு நேரில் சென்று தமிழக முதல்வர் தலைமையில் வேண்டிய பிறகும் ஆயுத தளவாடங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டது. அதுவும் போதாதென்று போர் முடிந்ததாக இலங்கை அரசு அறிவித்த பிறகும், இலங்கை அதிபரை இந்தியாவிற்கு அழைத்து மரியாதை செய்தது, இந்தியத் தமிழ்மக்களையும் இலங்கைத் தமிழ் மக்களையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
இந்த நிலையில், ஐ.நாவின் குழுவே விசாரணை கோருவதால், இதில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ள இந்திய அரசு, இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை விசாரிக்க வலியுறுத்த வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வற்புறுத்துகிறோம்.
இந்தக் கட்டத்திலாவது இந்திய அரசு தமிழ் மக்களின் வேதனை மிக்க உணர்வுகளைப் புரிந்து கொண்டு பகிரங்க விசாரணைக்கு வலியுறுத்த வேண்டும். பகிரங்க விசாரணையின் போது செய்தியாளர்கள், ஊடகங்கள், அதில் பங்கேற்க முழு அனுமதி வேண்டும்.
ஆளும் பொறுப்பிலுள்ள காங்கிரஸ் கட்சியும், தி.மு.கவும், இது பற்றி உறுதியான, தெளிவான நிலையை எடுக்கத் தவறினால், இந்திய ஒருமைப்பாட்டு உணர்வுக்கே ஆபத்து விளையும் என்பதை இந்திய சுதந்திரப் போராட்டத்தில் எண்ணற்ற வீர்களைப் பலிகொடுத்த பொறுப்புள்ள தேசபக்திமிக்க இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
தமிழ் மக்கள், ஜாதி, மத, கட்சி வேறுபாடுகளை மறந்து, சொந்த சகோதரர்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டதற்கு nullநீதி கேட்கும் இப்போராட்டத்தில் அணிதிரளவும் வேண்டுகிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்