30 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப்பை சுருட்டியது சன் ரைசர்ஸ்

ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, மே-13 - ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மெகாலியில் நடைபெற்ற லீக் சுற்றில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியும் மோதின. சன் ரைசர்ஸ் அணியில் சங்ககராவுக்குப் பதிலாக கேமரான் ஒயிட் கேப்டனாக செயல்பட்டார். டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீசியது. சன் ரைசர்ஸ்  அணியில் தொடக்க வீரர்களாக பார்தீவ் பட்டேலும், தவானும் களம் இறங்கினர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தவான் 15 ரன்னுக்கு ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த விஹாரி  5 ரன்னுக்கும், கேப்டன் ஒயிட் 10 ரன்னுக்கும், சமாந்தரே ரன் எதுவும் எடுக்காமலும், சமி டக் அவுட் ஆகியும், வெளியேறினர்.

இதனால் சன் ரைசர்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 52 ரன்னில் தடுமாறியது. இந்த நிலையில் பார்த்தீவ் பட்டேலுடன் கரண் சர்மா ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். கரண் 22 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து பட்டேலுடன் பெரேரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக ரன்களை குவித்தது.பொறுப்புடன் விளையாடிய பார்தீவ் பட்டேல் அரை சதம் அடித்தார்.

ஆனால் துரதிருஷ்டவசமாக அவர் 61 ரன்களுக்கு அவுட் ஆனார். 47 பந்துகளை சந்தித்த அவர்  5 பவுண்டரிகளும், 2 சிக்சரும் விளாசினார்.

பெரேராவின் ஆட்டம் தூள் கிளப்பியது. 19 பந்துகளை சந்தித்த அவர் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 2 பவுண்டரிகளும் 2 சிக்சரும் அடங்கும். 20 ஓவரில் சன் ரைசர்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 150 ரன் குவித்தது. இதையடுத்து 151 ரன் என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாத கில்கிறிஸ்டும், மன்தீப்சிங்கும், களமிறங்கினர். ஸ்டெயின் வீசிய முதல் ஓவரில் மன்தீப்சிங் டக் அவுட் ஆனார். பின்னர் மார்ஷ் களமிறங்கினார். இந்த ஜோடி நிதானமாக ரன்களை குவித்தது. ஸ்கோர் 45-ல் இருக்கும்போது, கில்கிறிஸ்ட் மற்றும் மார்ஷ் விக்கெட்டை சமி கைப்பற்றினார். இதனால் ஆட்டம் சூடு பிடித்தது.

குறிப்பிட்ட இடைவெளியில் பஞ்சாப் அணி விக்கெட்டுகளை சன் ரைசர்ஸ் அணி கைப்பற்றியது. 

போமர் பேச் மட்டும் அதிகபட்சமாக 32 ரன் எடுத்தார். சதீஷ் 25 ரன் எடுத்தார். மற்ற வீரர்கள் சொர்ப்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

 பஞ்சாப் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 129 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.  இதனால் சன் ரைசர்ஸ் அணி 39 ரன் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றிபெற்றது.  சன் ரைசர்ஸ் அணியில் சம்மி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஸ்டெயின் 2 விக்கெட்டும், பெரேரா ஒரு விக்கெட்டையும், கைப்பற்றினார்.  சன் ரசர்ஸ் அணிக்கு இது 8 -வது வெற்றியாகும். இன்னும் 3 போட்டிகள் உள்ள நிலையில்  அடுத்த சுற்றுக்கு நுழைய சன் ரைசர்ஸ் அணிக்கு  அதிக வாய்ப்பு உள்ளது. 8 தோல்விகளை கண்ட பஞ்சாப் அணியின் அடுத்த சுற்று கனவு தகர்ந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்: