முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாரிசாக யாரையும் நியமிக்கவுமில்லை பாபா உயில் எதுவும் எழுதவுமில்லை

வெள்ளிக்கிழமை, 29 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

புட்டபர்த்தி, ஏப்.  - 30 - தனக்கு பிறகு அறக்கட்டளையின் தலைவராக இன்னார்தான் வர வேண்டும் என்று பாபா என்றுமே விரும்பியதில்லை. இது தொடர்பாக உயில் எதுவும் எழுதப்படவில்லை என்று சாய்பாபா அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர். புட்டபர்த்தியில் செய்தியாளர்களை சந்தித்து அறக்கட்டளை நிர்வாகிகள் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பகவதி, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சக்கரவர்த்தி, தொழிலதிபர் வேணுசீனிவாசன், பாபாவின் தம்பி மகன் ரத்னாகர், உச்சநீதிமன்ற வழக்கறிஞர் நாகானந்த் ஆகியோர் பேசினர். பாபாவுக்கு பணிவிடைகள் செய்ய அவரால் அமர்த்திக் கொள்ளப்பட்டவர்தான் சத்யஜித். அவர் அறங்காவலரோ, வாரிசோ அல்ல. பாபா உயில் எதையும் எழுதி வைக்கவில்லை. அப்படி எழுதியிருப்பதாக யாரும் கூறவில்லை என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
அறக்கட்டளையின் தலைவராக அடுத்து யாரை தேர்வு செய்வது, அறக்கட்டளை பணிகளை எவ்வாறு ஒருங்கிணைப்பது என்பது குறித்து முடிவுசெய்ய அடுத்த வாரம் அறங்காவலர்கள், நிர்வாக குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவித்தனர். அறக்கட்டளைக்கு எவ்வளவு சொத்து உள்ளது என்பது குறித்து அவரவர்கள் இஷ்டத்திற்கு கூறி விஷயத்தை பூதாகரமாக்கி விட்டார்கள் என்று குறிப்பிட்ட அறங்காவலர்கள் அறக்கட்டளையின் எல்லா சொத்துக்களுமே அறப்பணிகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் அவற்றை வணிக நோக்கிலோ, வேறு நோக்கிலோ பயன்படுத்த போவதில்லை என்பதையும் உறுதிப்படுத்தினர். பாபா இறப்பதற்கு முன்னாலேயே அவருக்கு சவப் பெட்டி வாங்கப்படுவதாக கூறப்படும் தகவல்களையும் அவர்கள் மறுத்தனர். பாபாவின் மறைவுக்கு பிறகே பெங்களூரில் இருந்து அந்த பெட்டி தருவிக்கப்பட்டது என்றனர். பாபா மருத்துவமனையில் இருந்த போது அவரது உறவினர்களை பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை பாபாவின் தம்பி மகன் ரத்னாகர் மறுத்தார். பாபா மருத்துவமனையில் இருந்த 27 நாட்களும், உறவினர்களும், அறக்கட்டளை உறுப்பினர்களும், குடும்ப உறுப்பினர்களும் சென்று பார்த்து வந்திருப்பதாக கூறிய அவர், யாரும் இதை போன்ற குற்றச்சாட்டை கூறவில்லை என்றும் கூறினார்.
தனக்கு உடல்நலம் குன்றத் தொடங்கியவுடன் பாபாவே மருத்துவமனையை தேர்வு செய்ததுடன் டாக்டர்களையும் சிகிச்சை அளிக்க தேர்வு செய்ததாக அவர்கள் குறிப்பிட்டனர். அறக்கட்டளை நிர்வாகத்தில் தலையிடும் எண்ணமோ அல்லது அறக்கட்டளையை தங்கள் பொறுப்பில் எடுத்து கொள்ளும் எண்ணமோ தங்களுக்கு இல்லை என்று பாபாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த மத்திய ஆந்திர மாநில அரசு தலைவர்கள் தங்களிடம் கூறியிருப்பதையும் அவர்கள் குறிப்பிட்டனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்