நேரு விளையாட்டரங்கில் ஒருங்கிணைந்த வளாகம்: முதல்வர்

செவ்வாய்க்கிழமை, 14 மே 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.15 - ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் ரூ.12 கோடியில் ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகம் அமைக்கப்படும். விளையாட்டு வீரர்களுக்கு உணவுப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிக்கை வருமாறு:-

அறிவாற்றலை வளர்க்கக் கூடிய கல்வி, ஆரோக்கியத்தை பேணிக் காக்கக் கூடிய விளையாட்டு ஆகிய இரண்டும் இளைய சமுதாயத்தின் இரு கண்கள் என்பதால் இவற்றை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. 

தமிழ்நாட்டை விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டில்  இந்தியாவிலேயே தலை சிறந்த மாநிலமாக உருவாக்கும் வகையில்,  இதற்கென தனியாக ஒரு புதிய கொள்கை உருவாக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கொள்கை, சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே விளையாட்டில் ஈடுபட வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்,  விளையாட்டிற்கு ஏற்றப்படி அவர்களது உடலை தயார்படுத்தும் முறைகள், மாற்றுத் திறனாளிகள் இடையே விளையாட்டு ஆர்வத்தை ஏற்படுத்துதல், விளையாட்டு அரங்கங்கள் அமைத்தல்,  பன்னாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு  பதக்கங்கள் பெறுவதற்கு வழிவகை செய்யும் பயிற்சிகள் அளித்தல், அந்த பயிற்சிகளை தருவதற்கு  தகுதி வாய்ந்த பயிற்சியாளர்கள் தெரிவு செய்தல், விளையாட்டுகளுக்கு அடிப்படை தேவைகளான தடகள தளங்கள், நீச்சல் குளங்கள் போன்ற பல்வேறு அமைப்புகளை உருவாக்குதல், விளையாட்டு மைதானங்களை உருவாக்குதல் போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கும். 

உடல் ஆரோக்கியம் பேணப்படுவதன் மூலம்  நோய் விகிதம் மற்றும் இறப்பு விகிதம் குறையும்  என்பதன் அடிப்படையிலும்,  ஆரோக்கியமான,  துடிப்பான வாழ்க்கை பல்வேறு நோய்களை தடுக்கும்  கேடயம் என்பதைக் கருத்தில் கொண்டும்,  அனைத்துத் தரப்பு மக்களும் ஆரோக்கியமான வளமான வாழ்வை பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் முதலமைச்சரின் அனைவருக்கும் உடல் ஆரோக்கியம்  என்ற ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.   இத்திட்டம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஊடகத் துறை, உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்பு மற்றும் பல்வேறு நலச் சங்கங்கள், விளையாட்டு இணையங்கள், சுய உதவிக் குழு அமைப்புக்கள் மற்றும் இதர அமைப்புகளின் ஒத்துழைப்போடு செயல்படுத்தப்படும். 

1993 ஆம் ஆண்டு என்னால் துவக்கி வைக்கப்பட்ட ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் புதிய செயற்கை புல் ஓடு தளம், கால் பந்து வளாகம், புதுப்பிக்கப்பட்ட அலுவலகம் ஆகியவற்றுடன் புதிய பொலிவு பெற்று விளங்குகிறது. தற்போது பல்நோக்கு உள் விளையாட்டரங்கம் அருகில் செயற்கை இழை தட கள ஓடு தளம் மற்றும் இயற்கை புல் வெளி கால்பந்து திடல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் விளையாட்டு வீரர்கள் மேலும் பயன் அடைவதற்கு ஏதுவாக ஸ்குவாஷ் அரங்கம், இறகுப் பந்து உள்ளரங்கம், கையுந்துப் பந்து, கூடைப் பந்து ஆடு களங்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கென பிரத்யேக நீர் சிகிச்சை நீச்சல் குளம் ஆகியவை கொண்ட மேம்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகம் 12 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதனால் வருங்காலத்தில் சர்வதேச அல்லது தேசிய அளவிலான போட்டிகள் இந்த ஒருங்கிணைந்த வளாகத்தில் நடத்த வழிவகை ஏற்படும்.

கடந்த 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டு அறிவிப்புகளின்படி முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் பத்து விளையாட்டுகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சிறந்த முறையில் நடத்தி முடிக்கப்பட்டன.  தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இடையே இந்தப் போட்டிகளின் மீதான தாக்கத்தை அதிகரிக்கும் நோக்கில், இந்தப் போட்டிகளை மேலும் வலுப்படுத்தி விளையாட்டுப் போட்டிகளின் தரம் அதிகரிக்கும் வகையில் தேசிய விளையாட்டுப் போட்டிகளைப் போன்று, முதலமைச்சர் கோப்பைக்கான மாநில போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படும்.  இதில் முதல் மூன்று இடம் வெல்வோர் ஒவ்வொருவருக்கும் 1 லட்சம் ரூபாய், 75,000 ரூபாய் மற்றும் 50,000 ரூபாய் முறையே ரொக்கப் பரிசாக வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கென ஆண்டுதோறும் கூடுதலாக 2.57 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 

மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகள் நடத்தும் போது விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்குவதற்கான கட்டமைப்பு வசதிகள் மிகவும் குறைவாக உள்ளதைக் கருத்தில் கொண்டு, போட்டிகளில் பங்கு பெறும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் வசதிக்காக சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய இரு இடங்களில் தலா 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன தங்குமிடம் மற்றும் உணவுக் கூட வசதிகள் ஏற்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் சுமார்  6000 ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் பணி புரிந்து வருகிறார்கள். அவர்கள் அலுவலக  நாட்களில்   நீண்ட நேரம்  பணிபுரிந்து வருவதுடன், விடுமுறை நாட்களிலும் அலுவலகத்திற்கு வந்து பணியாற்றுகிறார்கள்.   தொடர்ந்து பல மணி நேரம் இருக்கையிலேயே அமர்ந்து பணி புரிய வேண்டிய சூழ்நிலையினால் அவர்களது உடல் நலம் பாதிக்கப்படுகிறது.  ஊழியர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தால், பணிகளை விரைவாகவும், குறித்த காலத்திலும் முடிக்க இயலும்.  அவர்களின் பணித் திறன் அதிகரிக்கவும் வழிவகை ஏற்படும். எனவே அரசு ஊழியர்களின் உடல் நலத்தைப் பாதுகாக்க, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என  தனித் தனியே அனைத்து வசதிகளுடன் கூடிய உடற் பயிற்சி கூடம் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  இதற்காக 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு  செய்யப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

1995 ஆம் ஆண்டு ஏழாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் நடைபெற்ற போது,   டென்னிஸ் போட்டிகள் நடத்துவதற்காக நவீன வசதிகளுடன்  சென்னை நுங்கம்பாக்கத்தில் கட்டப்பட்ட டென்னிஸ் விளையாட்டரங்கம் அமைக்கப்பட்டு 18 ஆண்டுகள் கடந்த நிலையில் பன்னாட்டு அளவிலான போட்டிகள் நடத்த ஏதுவாக இங்குள்ள செயற்கை இழை டென்னிஸ் ஆடு களங்கள், மின்னொளி அமைப்புகள், ஸ்கோர் போர்டு ஆகியவைகளை மாற்றி அமைப்பதுடன் பல்வேறு சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட வேண்டிய நிலை உள்ளதால், தொலைக்காட்சி ஒளிபரப்பு வசதி, வீரர்கள் உடை மாற்றும் அறைகள், முக்கிய பிரமுகர்கள் அறை போன்ற பல்வேறு நவீன வசதிகளுடன் 4 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் இந்த டென்னிஸ் விளையாட்டரங்கம் புனரமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்  கொள்கிறேன்.  

10 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட, விளையாட்டில் ஆர்வமும், திறமையும் உள்ள 25 மாணவர்கள் மற்றும் 25 மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு,  அவர்களுக்கு விளையாட்டில் உயர் தர நுணுக்கங்களுடன் கூடிய விஞ்ஞான ரீதியான பயிற்சி அளிப்பதற்கென சென்னையில் உலகத் தரம் வாய்ந்த முதன்மை நிலை விளையாட்டு மையம்,  ஒன்று அமைக்கப்படும் என்றும் அதில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவ, மாணவியர் தங்கி பயிற்சி பெறுவார்கள் என்றும் ஏற்கெனவே நான் அறிவித்திருந்தேன். இதன்படி சிறுவர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மையம் ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கிலும், சிறுமியர்களுக்கான மையம் நேரு உள் விளையாட்டரங்கிலும் அமைக்கப்பட்டு  செயல்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தினை மேலும் விரிவுப்படுத்தும் நோக்கத்துடன், ஸ்ரீரங்கம், திருநெல்வேலி மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் விளையாட்டு உபகரணங்கள், நவீன உடற்பயிற்சிக் கூடம் ஆகிய வசதிகளுடன் கூடிய முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்  கொள்கிறேன். மேலும், இந்த மையங்களில் பயிற்சி பெறும் மாணவ-மாணவியருக்கு அந்தந்த இடங்களில் உள்ள சிறந்த பள்ளிகளில் கல்வி பயிலவும் அரசு ஆவன செய்யும்.  இந்த மையங்கள் அமைக்க ஆண்டொன்றுக்கு 90 லட்சம் ரூபாய் தொடரா செலவினமும், 60 லட்சம் ரூபாய் தொடர் செலவினமும் ஏற்படும். 

சர்வதேச விளையாட்டரங்கில் வெற்றி பெறும் விளையாட்டு வீரர்களுக்கு மருத்துவர்கள் மற்றும் உணவு நிபுணர்களின் ஆலோசனைப்படி விஞ்ஞான முறையில் விளையாட்டின் தன்மையின் அடிப்படையில் சத்தான சமச்சீர்  உணவு வழங்கப்பட்டு வருவது அவர்களின் வெற்றிக்கு ஒரு மூல காரணம் என்பதைக் கருத்தில் கொண்டு,  விளையாட்டு விடுதிகளில் பயிற்சி பெற்று வரும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சத்தான சமச்சீர் உணவு வகைகளை நாள்தோறும் வழங்குவதற்கு ஏதுவாக தற்போது வழங்கப்பட்டு வரும்  தொகையான 75 ரூபாய், 250 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காக, ஆண்டொன்றுக்கு கூடுதலாக  7 கோடியே  84  லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

 முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் பயிலும் சிறுவர், சிறுமியருக்கு உணவுக்காக நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 150 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் மேற்காணும் இடங்களில் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியருக்காக தனித்தனியே சிறப்பு விளையாட்டு விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன. இவர்களுக்கு உணவுப்படியாக நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 90 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.   மேற்காணும் முதன்மை விளையாட்டு மையம் மற்றும் சிறப்பு விளையாட்டு விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ மாணவியருக்கு வழங்கப்பட்டு வரும் உணவுப்படி இனிமேல் நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 200 ரூபாய் என உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காக, ஆண்டொன்றுக்கு கூடுதலாக 57 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

 சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கும் பயிற்றுநர்களின் பணியினை அங்கீகரிக்கும் வகையில், அவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர மதிப்பூதியம் 8,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காக ஆண்டொன்றுக்கு கூடுதலாக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கும் மாவட்ட விளையாட்டு வளாகங்கள் அனைத்தும் கட்டி முடிக்கப்பட்டு  15 முதல் 20 ஆண்டுகள் முடிந்து விட்டப்படியால் அவைகளை சீரமைத்து புதுப்பிக்க வேண்டியது அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு, விளையாட்டு அரங்கங்கள் மற்றும் கட்டமைப்புக்களை புதுப்பிக்க மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ஒரு முறை சிறப்பு மானியமாக 5 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.   

தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தேசிய மாணவர் படை என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.  ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட இந்த தேசிய மாணவர் படைக்கென தனியாக எந்த விதமான பயிற்சி நிலையமும் இல்லை என்பதைக் கருத்தில் கொண்டும், 

இதன் காரணமாக பயிற்சி முகாம்கள் நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டும், தேசிய மாணவர் படைக்கென தனியாக  பயிற்சி அகாடமி ஒன்று  12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  

எனது முந்தைய ஆட்சிக் காலத்தில் முதன் முதலாக  தமிழகத்தில் உடற் கல்வி மற்றும் விளையாட்டிற்கென பல்கலைக்கழகம் 2005 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 

125 ஏக்கர் பரப்பளவுள்ள மேலக்கோட்டையூர் என்ற இடத்தில் இயங்கி வரும் இந்தப் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் உடற் பயிற்சி செய்திட  பல்நோக்கு உடற்பயிற்சிக் கூடங்கள் அமையப் பெறவில்லை. இப்பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவ மாணவியரின் பாடத் திட்டத்திற்கு ஏற்ப பயிற்சி செய்திட 40 லட்சம் ரூபாய் செலவில் பல்நோக்கு உடற்பயிற்சிக் கூடம் ஒன்று அமைக்கப்படும் என்பதையும், விளையாட்டுத் திடல் 35 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.    

மேற்காணும் நடவடிக்கைகள், ஆரோக்கியமான தமிழகம் உருவாகவும், தமிழக விளையாட்டு வீரர்களின் திறன் சர்வதேச அளவில் மேம்படவும் வழி வகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன். 

மேற்கண்டவாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: