முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். சூதாட்டம்: மேலும் 25 கிரிக்கெட் வீரர்களுக்கு தொடர்பு

சனிக்கிழமை, 18 மே 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.19 - ஐ.பி.எல். சூதாட்டத்தில் மேலும் 25 கிரிக்கெட் வீரர்களுக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 6-வது சீசன் போட்டிகள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் கடந்த 1 1ற2 மாதங்களாக கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த தடவை எந்த அணிக்கு கோப்பை கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர் பார்ப்புகளுடன் இருந்த நிலையில், ஐ.பி.எல். ஆட்டங்களில் சூதாட்டம் நடக்கும் தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 2 நாட்களுக்கு முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சண்டிலா உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக சென்னையில் நேற்று முன்தினம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 6 தரகர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே நேற்று மும்பையில் 2 தரகர்கள் பிடிபட்டனர். இதுவரை மொத்தம் 22 பேர் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக கைதாகி இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து பல லட்சம் ரூபாய், லேப்-டாப்கள், கம்ப்யூட்டர்கள், செல்போன்கள் மற்றும் ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. லேப்-டாப்களில் என்னென்ன சூதாட்ட தகவல்கள் பதிவாகி உள்ளன என்று போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

கைதான கிரிக்கெட் வீரர்கள் மற்றும் தரகர்களை டெல்லி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம் நடந்த 2-வது நாள் விசாரணையில் பல பரபரப்பு தகவல்கள் போலீசாருக்கு தெரியவந்தன. குறிப்பாக ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தின் பின்னணியில் இருக்கும் பெரிய முதலைகள் யார் என்ற மர்ம முடிச்சு அவிழத் தொடங்கி இருக்கிறது. இது தவிர ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ள வீரர்கள், தரகர்கள் அனைவரும் ரகசியமாக ஒருங்கிணைந்து செயல்படுவது அம்பலமாகி உள்ளது.

ஸ்ரீசாந்த் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான பல தகவல்களை போலீசாரிடம் ஒளிவு மறைவின்றி கூறிவிட்டதாக தெரிகிறது. இதன்மூலம் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் பல அடுக்கு தரகர்களுடன் சங்கிலி தொடர்போல் நடந்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சீசனில் இதுவரை நடந்துள்ள ஆட்டங்களில் 15 போட்டிகளில் சூதாட்டம் நடந்து இருப்பதாக போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். அதை உறுதிபடுத்த போலீசார் ரகசிய விசாரணைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஐ.பி.எல். ஆட்டங்களில் மொத்தம் 9 அணிகள் ஈடுபட்டுள்ளன. இந்த 9 அணிகளிலும் சூதாட்டத்தில் ஈடுபடும் கிரிக்கெட் வீரர்கள் இருப்பதாக இதுவரை நடந்துள்ள விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இதனால் சூதாட்டத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் புரள்வதும் அதில் கணிசமான தொகை கிரிக்கெட் வீரர்களுக்கும், தரகர்களுக்கும் கிடைப்பதும் ஆதாரப்பூர்வமாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

டெல்லி போலீசார் மற்ற மாநில போலீசாருடன் இணைந்து நடத்தியுள்ள விசாரணைகளின் அடிப்படையில் ஆய்வு செய்ததில், இந்த சீசனில் விளையாடி வரும் ஐ.பி.எல். வீரர்களில் சுமார் 25 பேர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த 25 வீரர்கள் யார், யார் என்ற தகவலை வெளியிட மறுத்து விட்ட டெல்லி போலீசார், அந்த 25 வீரர்களையும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்து இருப்பதாக கூறினார்கள். சந்தேகப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 25 வீரர்களில் 6 பேர் தங்களது எல்லா ஆட்டங்களிலும் சூதாட்டத்தில் ஈடுபட்டதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

எனவே அவர்கள் விரைவில் கைது செய்யப்படக்கூடும் என்று தெரிகிறது. டெல்லி போலீசாரிடம் நேற்று முன்தினம் அங்கீத் சவான் வாக்குமூலம் கொடுக்கும் போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த மேலும் 2 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்ட தகவலை கூறியுள்ளார். அவர்கள் இருவரும் பேட்ஸ்மேன்கள். அதில் ஒருவர் இந்தியர். மற்றொருவர் வெளிநாட்டுக்காரர். இவர்கள் தவிர மற்ற ஐ.பி.எல். அணிகளில் உள்ள 8 வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ள தகவல் போலீசாருக்கு தெரியவந்தது. போலீசாரின் சந்தேகப் பார்வையில், கிரிக்கெட் வீரர்கள் கெவான் கூப்பர், பிரட்ஹாக், சித்தார்த் திவேதி, ரகானே ஆகியோர் உள்ளனர். இவர்கள் மீதான சந்தேகம் உறுதி செய்யப்பட்டால், எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவார்கள். இதற்கான நடவடிக்கைகளில் டெல்லி போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். போலீசாரின் இத்தகைய அதிரடியால் ஐ.பி.எல். வீரர்கள், சூதாட்ட தரகர்கள் கதிகலங்கி போய் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்