ஹைதராபாத், மே.19 - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது சன்ரைஸர்ஸ் ஹைதராபாத். ஆந்திரத் தலைநகர் ஹைதராபாதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் கேமரூன் ஒயிட் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்கள் பார்திவ் படேல் 2, ஷிகர் தவன் 1 ரன்னிலும், பின்னர் வந்த கேப்டன் கேமரூன் ஒயிட் ரன் ஏதுமின்றியும் வெளியேற, 3 விக்கெட் இழப்புக்கு 5 ரன்கள் என்ற பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டது. ஹைதராபாத். சமந்த்ராய் அரை சதம்: பின்னர் வந்த பிப்லப் சமந்த்ராயின் சிறப்பான ஆட்டத்தால் அந்த அணி சரிவிலிருந்து மீண்டது. அவர் 46 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்குப் பக்கபலமாக விஹாரி 19, டேரன் சமி 23 பெரேரா 17 ரன்கள் சேர்க்க, 20 ஒவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத். ராஜஸ்தான் தரப்பில் ஜேம்ஸ் ஃபாக்னர் 4 ஓவர்களில் 16 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் இந்த ஐபிஎல் போட்டியில் 2 - வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஃபாக்னர். ராஜஸ்தான் தோல்வி : எளிதான இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் கேப்டன் திராவிட் அஜிங்க்ய ரஹானே ஜோடி முதல்
விக்கெட்டுக்கு 7.3 ஓவர்களில் 39 ரன்கள் சேர்த்தது. திராவிட் 24 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். இதன்பிறகு அந்த அணியின் சரிவு தவிர்க்க முடியாததானது. ரஹானே 12, வாட்சன் 11 ரன்களில் ஆட்டமிழந்தனர். பின் வரிசையில் கெவன் கூப்பர் 12 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் மட்டுமே எடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. ராஜஸ்தான். தங்களுடைய அணியைச் சேர்ந்த 3 வீரர்கள் ஸ்பாட் - பிக்ஸிங்கில் கைதான பிறகு விளையாடிய இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் தோல்வி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 4 ஓவர்களில் 8 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹைதராபாதின் அமித் மிஸ்ரா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.