எதிர்காலத்தில் முறைகேடுகள் நிகழாதபடி நடவடிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, மே 20 - எதிர்காலத்தில் முறைகேடுகள் நிகழாதபடி தேவையான நடவடிக்கைகளை கிரிக்கெட் வாரியம் எடுக்கும் என்று அதன் தலைவர் ஸ்ரீனிவாசன் உறுதியளித்தார்.ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் நடந்த ஸ்பாட் பிக்சிங் முறைகேடுகள் தொடர்பாக பி.சி.சி.ஐ.யின் ஆலோசனை கூட்டம்  நேற்று சென்னையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பி.சி.சி.ஐ.யின் தலைவர் ஸ்ரீனிவாசன் கூறியதாவது:-

கிரிக்கெட் என்பது பண்பட்ட மனிதர்களுக்கான விளையாட்டு. இனி ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களின் நடத்தையையும் கண்காணித்து இதுபோன்ற முறைகேடுகள் எதிர்காலத்தில் நிகழாதபடி தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுப்பொம்.

தற்போது எழுந்துள்ள சர்ச்சை மீது நடவடிக்கை எடுக்க முழு விசாரணை அறிக்கையை எதிர்பார்க்கிறோம்.

பி.சி.சி.ஐ.யை பொருத்தவரை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வளையத்திற்குள் வராத ஓர் அமைப்பாகும். தகவல் அறியும் உரிமை சட்டத்தால் கிரிக்கெட் சூதாட்டத்தை நிறுத்தி விட முடியாது.

சர்வதேச கிரிக்கெட் சங்கத்தின் ஊழல் தடுப்பு பிரிவால் போலீசாரைப் போல் எல்லா தகவல்களையும் சேகரிக்க முடியாது. அதற்கு பல தடைகள் உள்ளன. போலீசாரை போல் எல்லா சூதாட்ட தரகரையும் கண்காணித்து கட்டுப்படுத்த எங்களால் முடியாது.

இனி ஒவ்வொரு கிரிக்கெட் அணிக்கும் தனித்தனியாக  ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவு அமைக்கப்படும். தற்போது எழுந்துள்ள ஸ்பாட் பிக்சிங் தொடர்பாக விசாரணை நடத்தும் கமிஷனராக கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு தலைவர் ரவி சவானி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒவ்வொரு விளையாட்டு வீரரின் ஏஜென்டும் இனி பி.சி.சி.ஐ. யின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படுவார்கள். சூதாட்ட தரகர்களை பி.சி.சி.ஐ.யால் கட்டுப்படுத்த முடியாது. அணியில் இருந்து நீக்கப்பட்ட மூவர் மீது ராஜஸ்தான் ராயல்ஸ் போலீசில் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்ய உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: