கோவை - திருப்பூரை சேர்ந்த தொழில் அதிபர்கள் தலைமறைவு

திங்கட்கிழமை, 20 மே 2013      விளையாட்டு
Image Unavailable

 

கோவை, மே.21 - ஐ.பி.எல்.சூதாட்ட கும்பலுடன் தொடர்புடைய கோவை-திருப்பூரை சேர்ந்த தொழில் அதிபர்கள் சுவிட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவாக உள்ளனர். ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத்சவான், அஜித் சண்டிலா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற சோதனையில் சென்னையில் 6 தரகர்கள் கைதானார்கள். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கோவையிலும் கிரிக்கெட் சூதாட்டம் நடந்திருப்பது தெரியவந்தது. சூதாட்ட தரகர்களான கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த லட்சுமணன், உக்கடம் அக்பர், சாய்பாபாகாலனி பாலசுப்பிரமணியம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்பாக ஆர்.எஸ்.புரம் இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான தனிப்படை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து கைதான தரகர்களிடம் விசாரணை நடத்தினர். 

விசாரணையில் கிடைத்த தகவலின் படி திருப்பூரை சேர்ந்த 2பேர் போலீசில் சிக்கினர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் லட்சுமணனின் கீழ்  செயல்பட்ட சூதாட்ட தரகர்கள் பற்றி திடுக்கிடும் தகவல் கிடைத்தன. லட்சுமணனும் 4 தகரர்களின் பெயர்களை கூறினார். கோவை-திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 4பேரும் பிரபல தொழில் அதிபர்கள் அதில் ஒருவர் பிரதீப் கோவை ஜவுளிக்கடை அதிபர், கடந்த சனிக்கிழமை இவர் சென்னையில் தான் இருந்துள்ளார். எப்படியும் போலீசார் தன்னை தேடுவார்கள் என்று அறிந்த பிரதீப் செல்போனை சுட்ச்ஆப் செய்து விட்டு தலைமறைவாகிவிட்டார். இன்னோரு தொழில் அதிபர் காரமடையை சேர்ந்த மேகராஜ் கார்டுவொர்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கடந்த  சனிக்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ்-பெங்களூர் ராயல் சேலஞ்சர் அணி மோதிய போட்டியை காண பெங்களூர் சென்றார். லட்சுமணன் சிக்கிய தகவல் அறிந்ததும் இவரும் தலைமறைவாகி விட்டார். இவர்கள் தவிர காரமடை சண்முகம், திருப்பூர் மில் அதிபர் துரைஆகியோரும் சூதாட்ட தரகர்களாக செயல்பட்டு வந்துள்ளனர். துரையுடன் திருப்பூரை சேர்ந்த பல்வேறு வியாபாரிகள் லட்சக்கணக்கில் பணம் கட்டியுள்ளனர். அந்த பணத்தை லட்சுமணனிடம் கொடுத்து கிரிக்கெட் சூதாட்டத்தை வெகு ஜோராக நடத்தி வந்துள்ளார். தற்போது அவரும் தனது செல்போனை ஆப் செய்துள்ளார். சண்முகம் பற்றி எந்த தகவல் கிடைக்கவில்லை. எனவே தொழில் அதிபர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை கண்டறிய பல சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

தலைமறைவான தரகர்களிடம் பணம் கட்டியவர்கள் யார் என்ற விபரங்களையும் போலீசார் சேகரித்து வருகிறார்கள். இதற்கிடையில் கோவையில் கைதான லட்சுமணன், அக்பர், பாலசுப்பிரமணியன் ஆகிய 3பேரும் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர் படுத்தப்பட்டு வரும் 31ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் 3பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: