ஐ.பி.எல். சூதாட்ட முக்கிய புள்ளி பிரசாந்த் சென்னையில் கைது

திங்கட்கிழமை, 20 மே 2013      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, மே.20 - ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சூதாட்டம் தொடர்பாக தலைமறைவாக உள்ள 7 தரகர்களை பிடிக்க சிபிசிஐடி போலீசார் 10 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். சென்னையில் சூதாட்டத்தின் முக்கிய புள்ளியாக கருதப்படும் பிரசாந்த் நேற்று  கைது செய்யப்பட்டுள்ளார். 

ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவான் மற்றும் 14 தரகர்களை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

டெல்லியை தலைமையிடமாக கொண்டு நடந்த இந்த சூதாட்டத்தில் மும்பை, தமிழ்நாடு, கர்நாடகா  உட்பட  பல்வேறு மாநிலங்களில் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதைதொடர்ந்து டெல்லி போலீசார் வெளிமாநில போலீசாருக்கு ரகசிய தகவல் அளித்தனர். அதன் பேரில் தமிழ்நாட்டில் கடந்த 16-ம் தேதி இரவு சென்னை முழுவதும் 20 இடங்களில் சிபிசிஐடி போலீசார்  சோதனை நடத்தினர்.

இதில், 6 தரகர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 லட்சம் ரொக்கம், 10 லேப்டாப், 15 போன்கள் கைப்பற்றப்பட்டன. இவர்களில் முக்கிய  நபராக கருதப்படும் அயனாவரத்தை சேர்ந்த பிரசாந்த் தென் ஆப்பிரிக்காவுக்கு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த சூதாட்டம் தொடர்பாக ஏற்கனவே கைது செய்த  6  பேரிடம்  பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப்பை சோதனை செய்த போது திடுக்கிடும் தகவல் வெளியானது. அதில், தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் உள்ள  சூதாட்ட தரகர்களுடன் உள்ள தொடர்பு குறித்த தகவல் தெரிய வந்தது.

இதைதொடர்ந்து சிபிசிஐடி போலீசார், தமிழக போலீசாருக்கு ரகசிய தகவல் அளித்தனர். அதன் பேரில் கோவை, திருப்பூர் போன்ற இடங்களில் 5 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பலரை பிடிக்க தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், 20-க்கும் மேற்பட்ட சூதாட்ட தரகர்கள் கைது செய்யபடலாம் என போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இந்நிலையில்,  சிபிசிஐடி போலீசார்  சென்னையில் உள்ள சவுகார்ப்பேட்டை, புரசைவாக்கம், சூளைமேடு பகுதியை சேர்ந்த  தலைமறைவாக உள்ள மேலும்  7 தரகர்களை  பிடிக்க   10 தனிப்படை  அமைத்து தேடி வருகின்றனர்.

சூதாட்ட தரகர்களுடன் ஐ.பி.எல். வீரர்கள் நடத்திய சுமார் 100 மணிநேர செல்போன் உரையாடல்களை இடைமறித்து ஒட்டு கேட்டதன் மூலமாக இவ்விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததாகவும் போலீசார் கூறினர். மேலும், மும்பை, சண்டிகர், கொல்கத்தா, ஐதராபாத் போன்ற நகரங்களில் உள்ள ஓட்டல்களில் ஐ.பி.எல். வீரர்கள் தங்கியிருந்த போது அவர்களை யார் யாரெல்லாம் வந்து சந்தித்தனர்? என்பதை கண்டறிவதற்காக சம்பந்தப்பட்ட ஓட்டல்களின் சி.சி.டி.வி. பதிவுகளையும் டெல்லி போலீசார் ஆய்வு செய்ய உள்ளனர். இந்நிலையில், ஐ.பி.எல். சூதாட்டப் புகார் தொடர்பாக ரஞ்சிக் கோப்பை வீரர் பாபுராவ் யாதவை டெல்லி போலீசார் நேற்று  கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மணிஷ் குதேவாவுக்கு நெருக்கமான பாபுராவ், சூதாட்ட தரகர் சுனில் பாட்டியாவை சண்டிலாவுக்கு அறிமுகம் செய்து வைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இது குறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக கடந்த 15 தினங்களாக சிபிசிஐடி போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். இதன் தொடர்ச்சியாகதான் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் 20 இடங்களில் சோதனை நடத்தினோம். அதில், 6 பேரை பிடித்து உள்ளோம். இந்த 6 தரகர்களுமே தங்களுக்கென அலுவலகம் அமைத்து உள்ளனர். அங்கு தங்களது சூதாட்ட வேலைகளை அரங்கேற்றியுள்ளனர். இவர்களில் முக்கிய நபராக கருதப்படும் அயனாவரம் பிரசாந்தை  உட்பட 7 பேர் தலைமறைவாக உள்ளனர்.

தற்போது, அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்து உள்ளனர். அவர்கள் பிடிபடும் பட்சத்தில் சூதாட்ட புகார் தொடர்பாக மேலும் முக்கிய புள்ளிகள் பலர் பிடிபடுவர்' என்றார். இதற்கிடையே, சென்னையில் சூதாட்டத்தின் முக்கிய புள்ளியாக கருதப்படும் பிரசாந்த் நேற்று  கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றதாக கூறப்பட்ட பிரசாந்த், நேற்று  தனது வழக்கறிஞருடன் வந்து சி.பி.சி.ஐ.டி. போலீசில் சரண் அடைந்தார். டெல்லியில் பதுங்கியுள்ள மற்றொரு முக்கிய புள்ளி அகுஜா குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக பிடிபட்ட 6 தரகர்களை காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: