சண்டிலா உறவினர் வீட்டில் சூதாட்ட பணம் சிக்கியது

செவ்வாய்க்கிழமை, 21 மே 2013      விளையாட்டு
Image Unavailable

 

புது டெல்லி, மே. 22 - ஐ.பி.எல் கிரக்கெட் சூதாட்ட புகாரில் சிக்கியுள்ள அஜித் சண்டிலாவின் உறவினர் வீட்டில் போலீஸ் நடத்திய சோதனையில் சூதாட்டப் பணம் ரூ. 20 லட்சம் சிக்கியுள்ளது. ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் நாட்டையே பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த சூதாட்டத்தில் ்ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா, அங்கீத் சவான் மற்றும் புக்கிகள் பலரை போலீஸ் ஏற்கனவே கைது செய்துள்ளது.  கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் அதிர வைக்கும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. சண்டிலாவிற்கு சூதாட்ட தரகர் சுனிலை அறிமுகப்படுத்தி வைத்த ரஞ்சி டிராப்பி கிரிக்கெட் வீரர் பாபுராவ் யாதவிடம் நேற்று முன்தினம் விசாரணை நடந்தது. ஆனால் அவரை போலீசார் கைது செய்யவில்லை. 

இந்நிலையில், அரியானா மாநிலம் பால்வால் நகரில் உள்ள சாண்டிலாவின் உறவினர் வீட்டில் டெல்லி போலீசார் சோதனை நடத்தினர். சாண்டிலாவையும் போலீசார் உடன் அழைத்துச் சென்றிருந்தனர். அங்கு சாண்டிலாவின் பையில் இருந்த 20 லட்சம் ரூபாயை போலீசார் கைப்பற்றினர். அந்த பணம் சூதாட்ட பணம் தான் என்பதை சாண்டிலா ஒப்புக்கொண்டார். இதற்கிடையே, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவுத் தலைவர் ரவி சவானி டெல்லி காவல்த் துறை ஆணையர் நீரஜ் குமாரை சந்தித்து பேசினார். 

அப்போது சூதாட்டம் தொடர்பான விசாரணைக்கு கிரிக்கெட் வாரியம் முழு ஒத்துழைப்பு தரும் என்று உறுதி அளித்ததார். சூதாட்டத்தில் ்ஈடுபட்ட 3 வீரர்கள் மீதும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் டெல்லி போலீசிடம் முறைப்படி புகார் தரப்பட்டது. மேலும் மூன்று வீரர்களின் ஒப்பந்தத்தையும் ரத்து செய்து விட் டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் நேற்று முன்தினம் இரவு அறிவித்தது. இந்த நிலையில், ஐ.பி.எல் சூதாட்டம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநலன் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

மேலும் பிளே ஆப் மற்றும் இறுதிப் போட்டிகளை விசாரணை முடியும் நடத்தக் கூடாது என்றும் அந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையே, சூதாட்ட வழக்கின் முதல் தகவல் அறிக்கை நகல் கேட்டு ஸ்ரீசாந்த் டெல்லி நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு மாஜிஸ்திரேட் கவுரவ் ராவ் முன் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்ரீசாந்த் சார்பில் வழக்கறிஞர் யாரும் ஆஜராகவில்லை. இதனால், மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: