அகில இந்திய கூடைப் பந்தாட்டம்: டேராடூன்-க்கு கோப்பை

புதன்கிழமை, 22 மே 2013      விளையாட்டு
Image Unavailable

பெரியகுளம்-மே.23 - பெரியகுளத்தில் கடந்த 15ம் தேதி முதல் 21ம் தேதி வரை 54வது அகில இந்திய கூடைப்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் மொத்தம் 24 அணிகள் கலந்து கொண்டன. இதில் நாக் அவுட் முறையில் நடைபெற்ற போட்டிகளில் இந்தியன் ஓவர்சீஸ் அணி சென்னை, இந்திய தரைப்படை அணி புதுடெல்லி, ஒ.என்.ஜி.சி அணி டேராடூன், மற்றும் விஜயா வங்கி பெங்களுரு அணிகள் லீக் சுற்றுக்கு தகுதி பெற்றன. கடந்த மூன்று நாட்;களாக நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டேராடூன் அணி மற்ற மூன்று அணிகளையும் வென்று முதல் பரிசான  பி.டி.சிதம்பரசூரியநாராயணன் நினைவு சுழற்கோப்பையையும் 25000 பரிசுத் தொகையையும் தட்டிச் சென்றது.  இந்திய தரைப்படை அணி மற்றும் விஜயா வங்கி அணிகளை தோற்கடித்து இந்தியன் ஓவர்சீஸ் அணி இரண்டாம் இடம் பிடித்து அழகுசங்கரலிங்கம் செட்டியார் நினைவு சுழற்கோப்பை மற்றும் 20000 பரிசுத் தொகையை பெற்றனர். விஜயா வங்கி அணியை தோற்கடித்து மூன்றாம் இடம் பிடித்த இந்திய தரைப்படை அணிக்கு 15000 பரிசுத் தொகையும் கோப்பையும் வழங்கப்பட்டது. விஜயா வங்கி அணி நான்காம் இடம் பெற்று 10000 பரிசுத் தொகை மற்றும் கோப்பையை பெற்றது. பரிசளிப்பு விழாவில் தேனி  மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். சிறந்த விளையாட்டு  வீரருக்கான பரிசான  ஹீரோ எச்.எப்.டான் பைக் டேராடூன் அணியை சேர்ந்த அம்ரித்பால்சிங்க்கு வழங்கப்பட்டது. சிறந்த இளம் விளையாட்டு வீரருக்கான  பரிசு விஜயா வங்கியை சேர்ந்த அனில்குமாருக்கு வழங்கப்பட்டது. நன்னடத்தை சான்றுக்கான அணியாக நாமக்கல் அணி தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. 9 முறை சிறந்த  மூன்று புள்ளிகள் ஷாட் எடுத்த ஐ.ஓ.பி சென்னை அணியை சேர்ந்த பிரசன்னவெங்கடேஷ்க்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற முதல்வர் கோப்பைக்கான போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பிடித்த தேனி மாவட்ட அணியில் இடம் பெற்று ரூ.75000 பரிசுத் தொகை பெற்ற பெரியகுளத்தை சேர்ந்த முஜிபூர்ரகுமான், நல்லகுரு மற்றும் ஜெய்கணேஷ் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. இவ்விழாவில் தேனி மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஒ.பி.ரவீந்திரநாத்குமார் அருண் மோட்டார்ஸ் உரிமையாளர் பவுன்கோயபால் சில்வர் ஜுபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளரும் தமிழ்நாடு கூடைப்பந்தாட்ட கழக தலைவருமான சிதம்பர சூரியவேலு வடுகபட்டி டாக்டர் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சில்வர்;;;;ஜுபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர். இப்போட்டிகளை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: