சென்னை, மே.23 - சென்னை போட்டிக்கு ரூ.360 கோடி பந்தயம் கட்டப்பட்டதாக சூதாட்ட தரகர் பிரசாந்த் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் பல கோடி பணம் புரண்டதும், அடுக்கடுக்காக முக்கிய புள்ளிகள் கைது செய்யப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மும்பையில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கைது செய்யப்பட்ட அதே நேரத்தில் சென்னையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது சூதாட்ட தரகர்கள் ஹரீஷ் பஜாஜ், வேதாச்சலம், லக்கி, பிரவீண்குமார், தீபக் பஜாஜ், சுனில் பஜன்லால் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
வசதி படைத்த பெரும் புள்ளிகளான இவர்கள் சென்னையில் தங்கி தொழில் செய்து வரும் வடமாநிலத்தவர்கள். விசாரணையில் சூதாட்ட தரகர்களை ஒருங்கிணைத்து தலைவராக செயல்பட்டது பிரசாந்த் என தெரிய வந்தது. அயனாவரத்தைச் சேர்ந்த தொழில் அதிபரான இவர் போலீஸ் சோதனையில் சிக்காமல் தப்பினார். அவருடன் முக்கிய புள்ளிகள் பலரும் தலைமறைவானார்கள். இவர்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இதை அறிந்த பிரசாந்த் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிண்டியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசில் சரண் அடைந்தார். அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தி லேப்-டாப், டைரி, செல்போன்கள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களை கைப்பற்றினர்.
போலீசார் அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்தினார்கள். பிரசாந்த் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் இருந்து அவருக்கும் டெல்லி, ஆமதாபாத், ஜெய்ப்பூர் போன்ற இடங்களில் உள்ள சூதாட்ட தரகர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
பிரசாந்தின் கீழ் சென்னையில் மட்டும் சிறிய, நடுத்தர, பெரிய தரகர்கள் என 3 வகைப்பட்டோர் 150-க்கும் மேற்பட்டோர் செயல்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களை ஒருங்கிணைத்து பிரசாந்த் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இவர்கள் மூலம்தான் கிரிக்கெட் போட்டிகளுக்கு பெட்டிங் நடத்தி இருக்கிறார்.
அந்த வகையில் ஒவ்வொரு போட்டிக்கும் பல கோடிக்கு பந்தயம் கட்டி இருக்கிறார்கள். எந்தெந்த போட்டிக்கு எவ்வளவு பந்தயப் பணம் கட்டப்பட்டது என்ற முழு விவரங்களையும் பிரசாந்த் வாக்குமூலமாக அளித்துள்ளார்.
சென்னையில் 6-ந்தேதி சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் மோதிய ஐ.பி.எல். போட்டி தொடக்க ஆட்டத்தில் மட்டும் ரூ. 360 கோடிக்கு பந்தயப் பணம் புரண்டு இருக்கிறது. இந்தப் போட்டியில் சென்னை அணி தோற்றதால் பிரசாந்த்துக்கு மிகப்பெரிய லாபம் கிடைத்து இருக்கிறது. அதன் பிறகுதான் சூதாட்டம் மேலும் விறுவிறுப்பை எட்டி இருக்கிறது.
முக்கிய புள்ளிகள், அரசியல் பிரமுகர்கள் பலர் பிரசாந்த்துடன் தொடர்பு கொண்டு பந்தயப் பணம் கட்டி இருக்கிறார்கள். தலைமறைவாக உள்ள சூதாட்டத் தரகர்களை பிடிக்க போலீசார் வலை விரித்துள்ளனர்.
இவர்களில் வேப்பேரியைச் சேர்ந்த உத்தம் ஜி ஜெயின், கீழ்ப்பாக்கம் சஞ்சய் பாப்னா ஆகியோர் முக்கிய புள்ளிகள் ஆவார்கள். இவர்கள் கோர்ட்டு மூலம் முன் ஜாமீனுக்கு முயற்சி செய்து வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது.
நேற்று முன்தினம் இவர்கள் இருவரது வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். சோதனைக்குப்பின் அவர்களது வீடுகளுக்கு சீல் வைக்கப்பட்டன. சரண் அடைந்த சூதாட்ட தரகர் பிரசாந்த் அன்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
ஏற்கனவே கைதான 6 தரகர்களில் ஹரிஷ் பஜாஜ், பிரவீண்குமார், லக்கி, வேதாச்சலம் ஆகிய 4 பேரையும் 10 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க கோரி சைதாப்பேட்டை கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். அதன்படி 4 பேரிடமும் 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார். இதையடுத்து 4 பேரிடமும் நேற்று முன்தினம் முதல் போலீசார் தங்கள் பொறுப்பில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.