முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். சூதாட்டம்: குருநாத்துக்கு 29 வரை போலீஸ் காவல்

சனிக்கிழமை, 25 மே 2013      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, மே. 26 -- ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பி.சி.சி.ஐ. தலைவர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனை வருகிற 29 ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்படும். அதன் பிறகு பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கிரிக்கெட் சூதாட்ட புகாரின் பேரில் நாடு முழுவதும் பல்வேறு தரகர்கள், புக்கிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் போன்ற வீரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் பாலிவுட் நடிகர் விண்டு தாராசிங்கும் கைது செய்யப்பட்டார். அவர் தனக்கும் பி.சி.சி.ஐ. தலைவர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனுக்கும் இடையில் இருந்த நெருங்கிய தொடர்பை மும்பை போலீசாரிடம் தனது வாக்குமூலம் மூலமாக அம்பலப்படுத்தினார். 

குருநாத்தின் பினாமி போல் தான் செயல்பட்டதாக அவர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து குருநாத்தை விசாரணைக்கு நேரில் வருமாறு மும்பை போலீசார் சம்மன் அனுப்பி அழைப்பு விடுத்தனர். இதையடுத்து கொடைக்கானலில் இருந்த குருநாத் மதுரை வந்து அங்கிருந்து விமானம் மூலம் தனது வழக்கறிஞருடன் மும்பைக்கு புறப்பட்டு சென்றார். குருநாத்திடம் மும்பை போலீசார் பல மணி நேரம் விசாரணை நடத்தி பின்னர் அவரை கைது செய்தனர். 

இதனிடையே அவரிடம் விசாரணை நடைபெற்றதாகவும் ஆனால் அவர் அதற்கு சரியாக ஒத்துழைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் மும்பை பெருநகர நீதிமன்றத்தில் குருநாத் மெய்யப்பன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 29 ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதையடுத்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தவுள்ளனர். அப்போது பல தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சீனிவாசனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பி.சி.சி.ஐ. நிர்வாகிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. சில அரசியல் தலைவர்களும் இதே கோரிக்கையை முன் வைத்துள்ளனர். எனவே சீனிவாசன் பதவி தப்புமா என்ற கேள்விக்கு விரைவில் விடை கிடைக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்