முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலூர் தாசில்தார் காளிமுத்து சஸ்பெண்ட்- கலெக்டர் சகாயம் அதிரடி நடவடிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 1 மே 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை, மே. - 1 - மாவட்ட நிர்வாகத்திற்கு களங்கம் ஏற்படுத்தியதாக மேலூர் தாசில்தாரை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் சகாயம் நடவடிக்கை எடுத்துள்ளார்.    தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவித்ததும் ஆளும் கட்சியான திமுகவினர் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டனர்.  இது குறித்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகளை மிரட்டியதோடு தாக்கவும் செய்தனர். குறிப்பாக மதுரை மாவட்டத்தில் திமுகவினரின் அராஜகம்  எல்லை மீறி சென்றது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள நையித்தான்பட்டியில் உள்ள ஒரு கோவிலில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, துணை மேயர் பி.எம் மன்னன்,மேலூர் ஒன்றிய செயலாளர் ரகுபதி, சிவஞானம் ஆகியோர் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு தீபாராதனை தட்டில் அழகிரி பணம் போட்டதை தாசில்தார் காளிமுத்து வீடியோ எடுத்தார். இதில் ஏற்பட்ட தகராறில் தாசில்தார் காளிமுத்தை மு.க.அழகிரி முன்னிலையிலேயே திமுகவினர் தாக்கினர். இது குறித்து தாசில்தார் காளிமுத்து கீழவளவு போலீஸ்  நிலையத்தில் புகார் செய்தார். இதை தொடர்ந்து மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்பட 4 பேர் மீதும் போலீசார் பல்வேறு  பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்தநிலையில் தாசில்தார் காளிமுத்து திடீரென பல்டி அடித்து என்னை யாரும் தாக்கவில்லை. உயர்அதிகாரிகளின் உத்தரவுபடியே புகார் கொடுத்தேன் என்று தெரிவித்தார்.
  இந்த நிலையில் இந்த வழக்கில் தன்னை விடுவிக்கும் படி மு.க.அழகிரி மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார். மேலூர் தாசில்தார் காளிமுத்தும் தன்னை யாரும் தாக்கவில்லை. உயர்அதிகாரிகளின் தூண்டுதலின் பேரிலேயே புகார் செய்தேன் என்று  ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் காளிமுத்துவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
கடந்த 1.4.2011 அன்று மத்திய மந்திரி மீது கீழவளவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்து விட்டு பின் முன்னுக்கு பின் தவறான தகவல்களை கூறி, மாவட்ட நிர்வாகம் மீது பொதுமக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை பரப்பிய தாசில்தார் காளிமுத்து 25.4.2011 முதல் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
  இதற்கு முன்பு மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் தன்னை ஆளும்கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வற்புறுத்துகிறார் என்று புகார் கூறிய மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமாறன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்