தண்டவாளத்தில் மரம் விழுந்து மின்சாரம் துண்டிப்பு ரயில்கள் தாமதம்

Train

திருச்சி மே. - 01 - தமிழகம் முழுவதும் கடந்த ஒருசில நாட்களாக வெளுத்துக்கட்டியது. இதனால் பரவலாக அன்றாட மாமூல் வாழ்க்கை பாதித்தது. இதைத் தொடர்ந்து நேற்று முன் தினம் இரவு சூறாவளிக்காற்றினால் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தது. சென்னை விருத்தாச்சலம் அகல ரயில் பாதை மார்க்கத்தில் நள்ளிரவில் சூறாவளிக் காற்றினால் தண்டவாளத்தில் மரம் சாய்ந்தது. இதனால் மின் வயர்கள் சேதமடைந்து மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு புறப்பட்டு வந்து கொண்டு இருந்த ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டது. அதே போன்று திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அருகே காட்டூர் பகுதியில் தண்டவாளத்தில் பெரிய மரம் ஒன்று விழுந்ததில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் ரயில் போக்குவரத்து பெரிதும் பாதித்தது. முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் அரியலூரிலும், பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் அரியலூர் மாவட்டம் செந்துறையிலும், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் கல்லகத்திலும், மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் புள்ளம்பாடி அருகிலும், சேது எக்ஸ்பிரஸ் டால்மியாபுரத்திலும், ஹெளரா எக்ஸ்பிரஸ் மாத்தூரிலும், மங்களூர் எக்ஸ்பிரஸ் ஈச்சங்காட்டிலும் நிறுத்தி வைக்கப்பட்டது.
புள்ளம்பாடி அருகே ரயில் தடத்தில் இருந்த மரத்தை ரயில்வே ஊழியர்கள் மூன்று மணி நேரம் போராடி மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் காலை 5.40 மணிக்கு திருச்சிக்கு வரவேண்டிய ரயில் பிற்பகல் 12.10 மணிக்கு வந்து சேர்ந்தது. அதே போன்று தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய 7 ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதை தொடர்ந்து மின்னல் வேகத்தில் ரயில் பாதையை சீரமைக்கும் பணிக்கு பின்பு அனைத்து ரயில்களும் புறப்பட்டு சென்றன. சுமார் 10 மணி நேரத்திற்கு பின்பு இந்த ரயில்கள் புறப்பட்டு சென்றது. இதனால சரியான நேரத்திற்கு செல்ல வேண்டிய ரயில் பயணிகள் பெரிதும் பாதித்தனர். இதனிடையே திருச்சி மாவட்டம் லால்குடி அருகே காட்டூரில் ரயில் பாதையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தப்படும் பணிகளுக்கிடையே நடு வழியில் நிறுத்தப்பட்ட ஒருசில ரயில்கள் விழுப்புரத்திலிருந்து மெயின் லயன் வழியாக திருப்பி விடப்பட்டது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ