முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லண்டன் செல்ல இருந்த விமானத்தில் கோளாறு

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.12 - சென்னை விமான நிலையத்தில் இருந்து 265 பயணிகளுடன் லண்டன் செல்ல இருந்த பிரிட்டிஷ் ஏர்வெஸ் விமானத்தில் என்ஜின் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் பயணிகள் அதிர்ஷ்டவசத்தில் உயிர் தப்பினர். சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 5:30 மணிக்கு பிரிட்டிஷ் ஏர்வெஸ் விமானம் புறப்படுவதற்காக நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. இதில் 265 பயணிகள் லண்டன் செல்ல இருந்தனர்.

அதற்காக நேற்றுமுன்தினம்   நள்ளிரவு 3 மணிக்கெல்லாம் பயணிகள்  சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர். அவர்களது பாஸ்போர்ட் மற்றும் உடமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஆய்வு செய்த பின்னர் விமானத்தின் இருக்கையில் அமருவதற்கு அனுமதியளித்தனர்.

இதனை தொடர்ந்து லண்டன் செல்ல இருக்கும் அவசரத்துடன்,  265 பயணிகள் காத்து இருந்தனர்.

பயணிகளுடன் தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த பிரிட்டிஷ் ஏர்வெஸ் விமானத்தை விமானி ஸ்டார்ட் செய்த போது விமானம் விண்ணில் பறக்க மறுத்துவிட்டது. விமானி தனக்கு தெரிந்த தொழில் நுட்ப உதவிகளை நாடினார். அத்தனையும் தோல்வியில் முடிந்தன.

விமானம் பறக்க இருந்த நேரம் கடந்து போனதும் பயணிகள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.  தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த விமானம் புறப்படாததால் விமான கட்டுப்பாட்டு அறை  விமான நிலைய அதிகாரி மற்றும் பைலட் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. நீண்ட நேரத்திற்கு பிறகு அந்த விமானத்தில் என்ஜின் கோளாறு ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த தகவல் பயணிகளுக்கு தெரிவிக்காமல் மறைக்கப்பட்டதால் பயணிகள் பெரும் கோபத்துடன் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் பிரிட்டிஷ் ஏர்வெஸ் விமான நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 6 மணி நேர அலைக்கழிப்புக்கு பின் சென்னையில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் பயணிகள் தங்க வைக்கப்பட்டனர். விமானத்தில் ஏற்பட்டு இருந்த என்ஜின் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால்  பைலட் மற்றும் உதவி பைலட், விமான பணிப்பெண்கள், 265 பயணிகள் என அனைவரும் உயிர் தப்பினர். பின்னர் வேறு விமானத்தில் பயணிகள் அனுப்பிவைக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்