முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வைகோ கருத்துக்கு அமைச்சர் தாமோதரன் கண்டனம்

வியாழக்கிழமை, 13 ஜூன் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.14 - அரசியல் வாழ்வில்  விரக்தியின் விளிம்பிலிருக்கும் வைகோ தமிழக விவசாயிகள் விரக்தியில் இருப்பதாக கூறியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் தாமோதரன்,  தமிழகத்தில் 2-வது பசுமை புரட்சிக்கு முதல்வர் ஜெயலலிதா தீட்டியுள்ள திட்டங்களை பட்டியலிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.இதுகுறித்து வேளாண்மைத்துறை அமைச்சர் செ.தாமோதரன் வெளியிட்டுள்ள அறிக்கை   வருமாறு:-

அரசியல் வாழ்வில் விரக்தியின் விளிம்பில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர்  வைகோ, விவசாயிகள் வாழ்வில் விரக்தி என்று அறிக்கை விட்டிருப்பது காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம் என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது. 

தமிழ்நாடு முதலமைச்சர்  மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றது முதல், தமிழ்நாட்டில் இரண்டாம் பசுமைப் புரட்சியினை உருவாக்கும் வகையில் முனைப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.  வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் திருந்திய நெல் சாகுபடி முறை, துவரையில் நடவு முறை, நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறை, துல்லிய பண்ணையம் போன்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்ததன் காரணமாக, 2011-2012 ஆம் ஆண்டில் 101.52 லட்சம் டன் அளவு  உணவு தானிய உற்பத்தியை எய்தி தமிழகம் சரித்திர சாதனை படைத்தது.  இதற்காக மத்திய அரசின் 'கிரிஷி கர்மான் விருது' தமிழகத்திற்கு கிடைத்தது.  

2012-2013 ஆம் ஆண்டைப் பொறுத்த வரையில், தென்மேற்குப் பருவமழை மற்றும் வடகிழக்குப் பருவமழை இயல்பை விட குறைவாக பெய்த சழ்நிலையிலும், தமிழகத்திற்கு உரிய காவேரி நீரை கர்நாடகம் திறந்துவிடாத சழ்நிலையிலும்,  தமிழ்நாடு முதலமைச்சர்  வேளாண் உற்பத்தி குறித்து ஒவ்வொரு நிலையிலும் கூர்ந்தாய்வு செய்ததன் விளைவாக, 71.98 லட்சம் ஏக்கர் பரப்பில் உணவு தானிய பயிர் சாகுபடி செய்யப்பட்டு, 60.75 லட்சம் டன் உணவு தானியம் தமிழ்நாட்டில் உற்பத்தி என கணிக்கப்பட்டுள்ளது. நெற்பயிர் மட்டும் 39 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்பட்டது.  உண்மைநிலை இவ்வாறிருக்க, தமிழகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான வறட்சி நிலவி வந்ததால், விவசாயம் முழுமையாக பொய்த்துப் போய்விட்டது என்ற  வைகோவின் கூற்று உண்மைக்கு புறம்பானது என்பதை  வைகோவுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 

வைகோ தனது அறிக்கையில், விைவசாயிகள் தங்களின் ஒரே வாழ்வாதாரமாகத் திகழ்ந்த நிலங்களில் பயிர் செய்ய முடியாத நிலையில் விவசாயத்தை விட்டு விட்டு, மாற்று வழி தேடிச் செல்லத் தொடங்கியதன் விளைவாகத்தான் தமிழகத்தில் விவசாயம் செய்வோரின் எண்ணிக்கை அதிர்ச்சி தரும் விதத்தில் குறைந்துவிட்டதாகவும், கிராமங்களில் மக்கள் தொகை மிகவும் குறைந்துவிட்டதாகவும், அதனால் நகர்ப்புறத்தில் மக்கள்தொகை பெருகி விட்டது எனவும் இதனால்   விவசாயம் இன்னும் குறைந்து பெரும் உணவு பஞ்சம் ஏற்படும், கோடிக்கணக்கான விவசாயிகள் வாழ்வு பாலைவனமாகி விடும் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.  இந்தக் கூற்றும் ஏற்கத்தக்கதல்ல. 

இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு  தமிழ்நாடு முதலமைச்சரின் அரசு செயல்பட்டு வருவதன் காரணமாக, தொழில் வளர்ச்சி பெருகி, கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் பணி நிமித்தம் காரணமாக நகர்ப்புறங்களில் குடிபெயர்ந்து வருகின்றனர்.  இது தமிழகம் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.  அதே சமயத்தில், இதன் காரணமாக, விவசாயம் குறைந்து உணவுப் பஞ்சம் ஏற்படும் என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.  ஏனெனில், உயர் தொழில்நுட்பங்களையும், புதிய உத்திகளையும் விவசாயிகளிடையே பிரபலப்படுத்தி, வேளாண் உற்பத்தியை உயர்த்திட நடவடிக்கை எடுத்ததுடன், கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் வறட்சி நிலையிலும் நெல் சாகுபடி மேற்கொள்ள சமுதாய நாற்றங்கால் மற்றும் நேரடி நெல் விதைப்பு போன்ற புதிய தொழில்நுட்ப உத்திகளைக் கையாண்டு செயல்படுத்துவதற்கு 68 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சம்பா சிறப்புத் தொகுப்புத்திட்டம், வாடும் நிலையில் இருந்த நெற்பயிரைக் காப்பாற்ற 69 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவில் கூடுதல் சிறப்பு உதவிகள், சாகுபடி பரப்பினை அதிகப்படுத்தும் வகையில் தரிசு நிலங்களை சீர்திருத்துதல், நுண்ணீர் பாசனங்களுக்கு மிக அதிக அளவு மானியம், நீர் ஆதார வளத்தினை பெருக்கிட 70,000 பண்ணைக் குட்டைகளை அமைத்தல்,  வேளாண் பணியாளர் பற்றாக்குறையினை போக்கும் வகையில் இயந்திரங்களின் பயன்பாட்டினை அதிகரித்தல், வேளாண்மை விற்பனை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற முனைப்பான, உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை  தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்துள்ளார்கள் என்பதையும், வைகோவுக்கு எடுத்துக்கூற விரும்புகிறேன். எனவே, தமிழ்நாட்டில் உணவுப் பஞ்சம் என்ற கற்பனை வாதத்தை  வைகோ கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  

விரல்விட்டு எண்ண முடியாத அளவில், லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு  தமிழ்நாடு முதலமைச்சர்  நிவாரணம் வழங்கியுள்ள நிலையில், விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில விவசாயிகளுக்கு மட்டுமே நிவாரணம் கிடைத்துள்ளது என்ற திரு. வைகோவின் வாதம் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது. 

இந்தியாவிலேயே வறட்சிக்கு நிவாரணம் தந்த ஒரே முதலமைச்சர்   தமிழ்நாடு முதலமைச்சர்  தான் என்பதை இந்தத் தருணத்தில்  வைகோவுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். இது மட்டுமல்லாமல், வறட்சியினால் விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாக பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற எண்ணத்தில், டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி செய்த அனைத்து விவசாயிகளையும் தேசிய வேளாண் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் சேர்ப்பதற்காக, விவசாயிகள் செலுத்த வேண்டிய கட்டணத்தையும் அரசே செலுத்தியது. டெல்டா மாவட்டங்களில் 50 விழுக்காட்டிற்கும் மேல் மகசல் பாதித்த 3.61 லட்சம் ஏக்கர் நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 15,000/- ரூபாய் வீதம்,  3 லட்சத்து 52 ஆயிரத்து 613 விவசாயிகளுக்கு 524.25 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

டெல்டா அல்லாத மாவட்டங்களைப் பொறுத்தவரையில், 50 விழுக்காட்டிற்கும் மேல் மகசல் இழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு நெற்பயிருக்கு ஏக்கருக்கு 5,000 ரூபாயும், பாசன ஆதாரமுள்ள நிலங்களில் இதர பயிர் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 4,000 ரூபாயும், பாசன ஆதாரமற்ற நிலங்களில் பயிர் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 3,000 ரூபாயும், தென்னை உள்ளிட்ட நீண்ட கால பயிர்களை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு 4,000 ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.  இதன்மூலம் 16.03 லட்சம் விவசாயிகள்  இது வரை பயன் அடைந்துள்ளனர். அவர்களுக்கு நிவாரணமாக 756.22 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, பயிர் காப்பீடு செய்த விவசாயிகள், பயிர் காப்பீட்டுத் தொகையினையும் பெறுவர். வறட்சிப் பணிகளுக்காக மொத்தத்தில் 3,881 கோடியே 65 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  உண்மை நிலை இவ்வாறிருக்க, மனம் போன போக்கில் அரசியல் அனுபவம் மிக்க  வைகோ பேசுவது அழகல்ல. 

பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்த விவசாயிகளுக்கு மட்டுமே நிவாரணம் என்பது எந்த விதத்திலும் விவசாயிகளுக்கு பயன்தராது. ஏன் எனில், பயிர் காப்பீட்டுத்திட்டம் என்பதே எங்கும் செயல்படுத்தப்பட்டது இல்லை. விவசாயிகள் அத்திட்டத்தில் சேர்ந்ததும் இல்லை. எனவே, இந்த அணுகுமுறை கைவிடப்படவேண்டும் என்று  வைகோ கூறியுள்ளார்.

பயிர் காப்பீட்டுத் திட்டம் என்பது மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டம் என்பதையும், இந்தத் திட்டம் 2000 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது என்பதையும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்பதையும்,  2012-13 ஆம் ஆண்டில் சாகுபடி மேற்கொண்டு, 50  விழுக்காட்டிற்கும் மேல் மகசல் இழப்பு ஏற்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது என்பதையும் திரு. வைகோ அவர்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.  வைகோ சொல்வது போல், பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்த விவசாயிகளுக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்பது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. 

பயிர் எடுப்புக் கணக்கைப் பொறுத்தவரையில், கிராம நிர்வாக அதிகாரிகளும், வேளாண்மைத் துறை அலுவலர்களும் இணைந்து ஒவ்வொரு கிராமத்திலும் ஆய்வு செய்து,50 விழுக்காட்டிற்கும் மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ள பயிர்களை எவ்வித விடுதலுமின்றி கணக்கெடுத்துள்ளனர்.  எனவே, இதில் பயிர் எடுப்புக் கணக்கு முறையாக செய்யப்படவில்லை என்ற வாதமே விதண்டாவாதம் என்பதை வைகோவுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். 

புள்ளி விவரங்களுடன் கருத்தைத் தெரிவிக்கும்  வைகோ, வறட்சி நிவாரணம் வழங்கிய விஷயத்தில் எவ்வித புள்ளி விவரத்தையும் சுட்டிக்காட்டாமல், வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசியிருப்பது விரக்தியின் விளிம்பில் அவர் இருப்பதை தெளிவாக்குகிறது.  இனி வருங்காலங்களில், உண்மை நிலையை உணர்ந்து அறிக்கை வெளியிட வேண்டும் என்று அவரை நான் கேட்டுக் கொள்கிறேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்