முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இயக்குனர் மணிவண்ணன் திடீர் மரணம்: இன்று உடல் தகனம்

சனிக்கிழமை, 15 ஜூன் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜூன்.16 - பிரபல இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் மாரடைப்பால் நேற்று திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 58. சென்னை நெசப்பாக்கத்தில் ஆர்.வி.ஆர். ஹவுஸ் குடியிருப்பு பகுதியில் மணிவண்ணன் குடும்பத்துடன் வசித்தார். நேற்று பகல் 12 மணிக்கு வீட்டில் உட்கார்ந்து இருந்தார். அப்போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. முதுகு வலிப்பதாக வீட்டில் இருந்தவர்களிடம் கூறினார். அடுத்த நிமிடம் மயங்கி கீழே சாய்ந்து இறந்து போனார். திரைப்படத்துறைக்கென்றே அவதாரம் எடுத்தது போல 1955 ஜூலை 31 ஆம் தேதியில் பிறந்த இயக்குனர் மணிவண்ணன்,  ஜூன் 15, 2013 தனது 30 வருடங்களுக்கும் மேலான திரைவாழ்க்கையைத் தனது இறுதி மூச்சுவரை வாழ்ந்த பெருமிதத்துடன் மாரடப்பால் இயற்கை எய்தினார்.

மணிவண்ணன் 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 50 படங்கள் டைரக்டு செய்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் இவரது சொந்த ஊர் ஆகும். 

 பாரதிராஜாவிடம் உதவியாளராகப் பணியாற்றி கோபுரங்கள் சாய்வதில்லை   படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்து கடந்த மாதத்தில் தனது 50-வது படமாக நாகராஜ சோழன் எம்.ஏ.,எம்.எல்.ஏவை இயக்கியவர் இயக்குனர் மணிவண்ணன்.

தமிழ்சினிமாவின் தலைசிறந்த ஒரு கோபுரம் சாய்ந்திருக்கிறது என்று சொன்னால் அதுமிகையாது. ஆனாலும் இவர் இயக்கிய படங்கள் நிச்சயம் ரசிகர்களுக்கு மட்டுமின்றி திரைப்படங்கள் இயக்க வருபவர்களுக்கும் என்றும் சாயாத கலங்கரைவிளக்களாகத் திகழும் என்பதில் ஐயமில்லை. 

பாரதிராஜாவிடம் 1979-ல் உதவி இயக்குனராக சேர்ந்தார். நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓய்வதில்லை படங்களுக்கு கதை, வசனம் எழுதினார். கோபுரங்கள் சாய்வதில்லை என்ற படத்தை 1982-ல் முதன்முதலாக டைரக்டு செய்தார்.

பாரதிராஜாவின் பலபடங்களுக்கு  வசனகர்த்தாவாகப் பணியாற்றிய இயக்குனர் மணிவண்ணனை தனது கொடிபறக்குது படம் மூலம் நடிகராகவும் அறிமுகப்படுத்தினார் இயக்குனர் இமயம் பாரதிராஜா. 

நிழல்கள் படத்தில் சிறு வேடத்தில் நடித்தார். காமெடி மற்றும் குணசித்திர வேடத்தில் நிறைய படங்களில் நடித்துள்ளார். வில்லன், துள்ளாத மனமும் துள்ளும், குருவி, தம்பி, எங்கள் அண்ணா, பம்மல் கே.சம்பந்தம், மாயி, படையப்பா, கொடி பறக்குது, தாய்மாமன் உள்பட 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இளமை காலங்கள், இங்கேயும் ஒரு கங்கை, நூறாவது நாள், பாலைவன ரோஜாக்கள், முதல் வசந்தம், ஜல்லிக்கட்டு, சின்னதம்பி பெரியதம்பி, அமைதிப்படை, ஆண்டான் அடிமை உள்ளிட்ட பல ஹிட் படங்களை டைரக்டு செய்துள்ளார்.தொடர்ந்து குணச்சித்திர நடிகராக, வில்லனாக மற்றும் நகைச்சுவை நடிகராக நடித்திருக்கும் இவரது வெற்றிக் கொடி.

கடைசியாக சத்யராஜை வைத்து அமைதிபடை 2-ம் பாகத்தை நாகராஜ சோழன் எம்.ஏ. எம்.எல்.ஏ. என்ற பெயரில் இயக்கி வெளியிட்டார்.

 இயக்குனர் மணிவண்ணன் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அதே மாவட்டத்தைச் சேர்ந்த நடிகர் சத்யராஜை வைத்து 25 படங்கள் இயக்கியவர். இவர்களது கூட்டணி தமிழ்சினிமாவில் வசூலைக்குவிக்கும் கூட்டணி என்றால் அது மிகையாகாது. அதற்கு இவர்களது கூட்டணியில் கடந்த மாதம் வெளிவந்து வெற்றி பெற்ற நாகராஜசோழன் படமும் மிகப்பெரிய உதாரணம். 

இயக்கத்துடன் சிறந்த வில்லன் நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் ரசிகர்களிடையே வரவேற்பினைப் பெற்றிருக்கும் மணிவண்ணன் ,கோயமுத்தூர் வார்த்தைகளைப் பிரபலப்படுத்தியதில் இளையதளபதி விஜய்க்கே முன்னோடி எனலாம்.

அரசியலில் மிகுந்த நாட்டமுடைய மணிவண்ணன் ஆரம்பகாலத்தில் வைகோவுடனும் பின்பு சீமானுடன் இணைந்து நாம் தமிழர் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும்  பணியாற்றினார். மனதில் பட்டதை வெளிப்படையாகவும் துணிச்சலுடனும் பேசுவதை வழக்கமாகக் கொண்ட இயக்குனர் மணிவண்ணன், ஈழத்தமிழர் படுகொலையில் திராவிட முன்னேற்றக்கழகம் தமிழர்களுக்கு மிகப்பெரிய துரோகம் விழைவித்து விட்டது என்று நாம் தமிழர் கட்சிக்கூட்டங்களில்  மேடைக்கு மேடை முழங்கினார். 

சமீபத்தில்  நடந்த மறுமுகம் படத்தின் பாடல்வெளியீட்டு விழாதான் மணிவண்ணன் கலந்து கொண்ட கடைசித் திரைப்படவிழாவாகும். அந்த மேடையில் பேசிய மணிவண்ணன், தனது குரு நாதர் பாரதிராஜாவுக்கும் தனக்கும் இடையே இருந்த குரு சிஷ்யன் உறவினையும், இருவருக்குமிடையே ஏற்ப்பட்ட சுவராஸ்யமான சம்பவங்களையும் நினைவு கூர்ந்தார். அதே மேடையில் தனக்கு சினிமாவைத் தவிர வேறொன்றும் தெரியாது என்று அவர் குறிப்பிட்டது நினைவு கூறத்தக்கது.

அன்னாரது மறைவிற்கு நாம்தமிழர் கட்சியின் நிறுவனரும் இயக்குனர் நடிகருமான சீமான் ஆயிரக்கணக்கான நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட மணிவண்ணனின் நெருங்கிய நண்பர்  நடிகர் சத்யராஜ் மற்றும் ஏராளமான திரையுலகப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.

இயக்குனர் மணிவண்ணனின் உடல் சென்னை ராமாவரம் ஜெய்பாலாஜி நகரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

மணிவண்ணனுக்கு செங்கமலம் என்ற மனைவியும், ரகுவண்ணன் என்ற மகனும், ஜோதி என்ற மகளும் உள்ளனர். அவரது இறுதி சடங்கு இன்றுநடக்கிறது.

மறைந்த இயக்குனர் மணிவண்ணன் உடலுக்கு நடிகர் சத்தியராஜ், இயக்குனர் மனோபாலா, சுந்தர்.சி, சிபராஜ், எம்.எஸ்.பாஸ்கர், விடுதலை சிறுத்தலைவர் திருமாவளவன், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, கொளத்தூர் மணி, இயக்குனர்கள் சீமான், விக்கரமன், ஆர்.கே.செல்வமணி, பி.எல்.தேனப்பன் மற்றும் நடிகை, நடிகைகள், இயக்குநர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்