முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதி வீட்டு முன் போராட்டம் - சேதுராமன் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 3 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.3 - முடங்கியுள்ள மின்வாரியத்தை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தி மின்தட்டுப்பாட்ஹைட தீர்க்காவிட்டால், கருணாநிதியின் வீட்டு முன் முற்றுகை போராட்டமும், சிறை நிரப்பும் போராட்டமும் நடைபெறும் என்று ந.சேதுராமன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து  அகில இந்திய மூவேந்தர்  முன்னணிக் கழக நிறுவன தலைவர் ந.சேதுராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்தும் மின் வாரியம் வாங்க மறுப்பதால் மின் தடை குறையவில்லை, காற்றாலை மின் உற்பத்தியாளர்களும் கடுமையான பாதிப்புக்குள்ளாயிள்ளனர். இதன் காரணமாக மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் 3 மணி நேரம் வரை தினமும் மின் தடை அமுல்படுத்தப்படுகிறது. 

சென்னையில் 1 மணி நேரம் மின் தடையை அறிவித்து மின் பற்றாக்குறையை உறுதி செய்துள்ளது. வெண்ணெய் இருந்தும் நெய்க்கு அலையும் பரிதாப நிலைதான் இன்றைய மின்சார வாரியத்தின் நிலைமை. நெல்லை மதுரை சாலையில் 75 சதவீத காற்றாலைகள் இயங்காமல் இருப்பதை நேரிடையாக பார்த்த பிறகுதான் இந்த அறிக்கையை விடுக்கிறேன்.

15 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் பெறுவதற்கு திறன் இருந்தாலும், உற்பத்தியோ 8500 மெகாவாட் தான். இன்னும் 10 ஆயிரம் மெகாவாட் அதிகம் தேவை. 2 ஆயிரம் மெகாவாட் பற்றாக்குறை. காற்றாலையிலிருந்து 5800 மெகாவாட் மின் உற்பத்தி திறன் இருந்தாலும், சென்றவாரம் வெறும் 1800 மெகாவாட் மின்சாரம்தான் எடுக்கப்பட்டுள்ளது என பத்திரிக்கை செய்திகள் குறிப்பிடுகின்றன. இதற்கு காரணம் என்ன ? காற்றாலை மின் உற்பத்தி உரிமையாளர்களிடம் கேட்டால் மின்சார வாரியத்தின் செயல்பாடுகள் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது என பதில் அளிக்கின்றனர். உற்பத்தி செய்த மின்சாரத்தைக் கூட மின்சார அதிகாரிகள் வாங்கவில்லையாம். உற்பத்தி செய்த மின்சாரத்தை வாங்கியிருந்தால் தொழிற்சாலைகள் கூடுதல் நேரங்களாவது இயங்கியிருக்கும். கோடை வெயிலால் அல்லல்படும் பொதுமக்களுக்கும் மனநிம்மதி கிடைத்திருக்கும். இந்த குறைபாடுக்கு காரணம் நிர்வாகத் திறமையின்மையா? தகுதியும் திறமையும் உள்ள அதிகாரிகளிடம் அதிகாரம் கொடுக்கவில்லையா ? அல்லது காற்றாலை மின் உற்பத்தி உரிமையாளர்களிடம் எதிர்பார்த்த  லஞ்சம் கிடைக்கவில்லையா ? என பல்வேறு கேள்விகள் பொது மக்களிடம் எழுகின்றன.

இக்கேள்விகளுக்கு பதில் அளிக்க அரசு கடமைப்பட்டுள்ளது.

வெளி மாநிலத்தில் இருந்து 1 யூனிட் ரூ10க்கு வாங்கும் இந்த மின் வாரியம் தயார் நிலையில் உள்ள உள்ளூர் காற்றாலை மின் உற்பத்தியாளர்களிடம் இருந்து 1 யூனிட் ரூ 2.75க்கு வாங்குவது ஏன் ? காற்றாலை உற்பத்தியாளர்களுக்கு கொடுக்க வேண்டிய ரூபாய் 1200 கோடியை ஏன் பாக்கி வைத்துள்ளது? என மக்கள் கேட்கிறார்கள். காற்றாலை உரிமையாளர்களின் ஆலைகளை முடக்குவதால் காற்றாலை தொழிலையே முடக்கும் முயற்சியா ? காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதல் இடத்தில் உள்ளது என அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தெரியாதா? 

மின் துறை அமைச்சர் தான் முடங்கிவிட்டார் என்றால், மின் உற்பத்தியும், விநியோகமும் முடங்கி விட்டதா? மின்சாரத் துறையே தன் சக்தியை இழந்தால் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்ற எம்.ஜி.ஆரின் பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. 

முடங்கியுள்ள மின்வாரியம் போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு. இல்லையெனில் மின்வாரியம் குறித்த வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும். இந்நிலை தொடர்ந்தால் அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் சார்பாக கருணாநிதியின் வீட்டில் முற்றுகைப் போராட்டமும், சிறை நிரப்பும் போராட்டமும் நடத்துவோம்.

இவ்வாறு அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக தலைவர் ந.சேதுராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்