முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்குவங்கத்தில் 4-வது கட்ட தேர்தல் - விறுவிறுப்பான வாக்குப்பதிவு

புதன்கிழமை, 4 மே 2011      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா,மே.4 - மேற்குவங்காளத்தில் நேற்று 4-வது கட்ட தேர்தலின்போது விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. 4 மணி நேரத்தில் 40 சதவீத வாக்குகள் பதிவாகின. ஒரு சில அசம்பாவித சம்பவங்களை தவிர மற்றபடி வாக்குப்பதிவு அமைதியாகவே நடந்தது.

மேற்குவங்க சட்டசபைக்கு 6 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதல் 3 கட்ட தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. அதில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் 179 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. நேற்று 4-வது கட்டமாக 63 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 4-வது கட்ட தேர்தலின்போது சிறு சிறு வன்முறை சம்பவங்களை தவிர மற்றபடி தேர்தல் அமைதியாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்றது. நேற்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கிய 4 மணி நேரத்தில் 40 சதவீத வாக்குகள் பதிவாகிவிட்டன. பர்த்வான் மாவட்டத்தில் 42.62 சதவீத வாக்குகளும் கிழக்கு மித்னாப்பூர் மாவட்டத்தில் 41.42 சதவீத வாக்குகளும் கெளரா மாவட்டத்தில் 36.84 சதவீத வாக்குகளும் ஹூக்ளி மாவட்டத்தில் 39.76 சதவீத வாக்குகளும் பதிவாகி இருந்தன என்று கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி என்.கே.சஹனா நேற்று கொல்கத்தாவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். கள்ள ஓட்டுப்போட முயன்றதாக நந்திகிராமில் அமைக்கப்பட்டிருந்த 53-வது வாக்குச்சாவடியில் இருந்த திரிணாமூல் காங்கிரஸ் ஏஜன்ட் கைது செய்யப்பட்டார். ஹூக்ளி மாவட்டத்தில் ஹன்குல் மற்றும் ஜங்கிபாரா ஆகிய இடங்களில் வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டிய இடது கம்யூனிஸ்ட் ஊழியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஹல்தியாவில் கள்ள ஓட்டுப்போட முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஹூக்ளியில் தேர்தல் பணியில் இருந்த தேர்தல் அதிகாரி திடீரென்று சுகவீனம் அடைந்ததால் அவர் நீக்கப்பட்டு வேறு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டார். இதனால் வாக்குப்பதிவு பாதிக்கவில்லை. மேலும் ஹூக்ளி பகுதியில் உள்ள ஆரம்பஹ் என்ற வாக்குச்சாவடியில் இருந்த தேர்தல் அதிகாரி ஒருவர் முறையற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதால் அவர் நீக்கப்பட்டார் என்று சாஹனா மேலும் கூறினார். 

மேற்குவங்கத்தில் இன்னும் இரண்டு கட்ட தேர்தல் நடக்கவுள்ளது. இந்த மாநிலத்தில் சட்டசபை தேர்தல் முடிந்ததும் தமிழகம், கேரளம், புதுவை, அசாம் மற்றும் மேற்குவங்காளத்தில் மே. 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்