முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோனியா காந்தியை சந்தித்து கனிமொழி நன்றி

சனிக்கிழமை, 29 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூன். 30 - ராஜ்யசபை தேர்தலில் காங்கிரஸ் ஆதரவுடன் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் கனிமொழி நேற்று டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து நன்றி தெரிவித்தார். அதே போல பிரதமரையும் கனிமொழி சந்தித்தார்.

வெறும் 23 எம்.எல்.ஏ. க்களை மட்டுமே கொண்ட தி.மு.க. ராஜ்யசபை தேர்தலில் காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் வென்றது.

பெரும் இழுத்தடிப்புக்குப் பின்னர் காங்கிரசின் ஆதரவு தி.மு.க.வுக்கு கிடைத்தது. இந்த நிலையில் தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலுவுடன் டெல்லி சென்ற கனிமொழி காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்து நன்றி தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது தேர்தலில் வெற்றி பெற்றதற்காக கனிமொழிக்கு சோனியாகாந்தி வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து பின்னர் பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது அலுவலகத்துக்கு சென்று கனிமொழி சந்தித்து பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தார். அவரும் கனிமொழிக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

முன்னதாக டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கனிமொழி, ராஜ்யசபை தேர்தலில் எங்களை ஆதரித்த சோனியாவுக்கு நன்றி தெரிவிப்பதற்காக நான் இங்கு வந்துள்ளேன் என்று தெரிவித்தார். பின்னர் அவர் சோனியாவை சந்தித்து தமது கட்சியின் சார்பில் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். அப்போது டி.ஆர்.பாலுவும் உடனிருந்தார். 

தமிழகத்தில் நடந்த ராஜ்யசபை தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து தே.மு.தி.க. வேட்பாளர் இளங்கோவன் போட்டியிட்டார். ஆனால் காங்கிரசின் ஆதரவு கிடைத்ததால் கனிமொழி வெற்றி பெற்று விட்டார். 45 வயதான கனிமொழி 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைதாகி பின்னர் ஜாமீனில் வெளிவந்தவர். சில மாதங்களுக்கு முன்பு இலங்கை பிரச்சினையை காரணம் காட்டி காங்கிரசுடன் 9 ஆண்டுகள் வைத்திருந்த கூட்டணியை தி.மு.க. முறித்துக் கொண்டது. அதன் பிறகு தற்போது நடைபெற்ற ராஜ்யசபை தேர்தலில் காங்கிரசின் ஆதரவை தி.மு.க. கோரிய போது சோனியா காந்தி மற்றும் அக்கட்சி தலைவர்கள் மிகுந்த தயக்கம் காட்டினர். பின்னர் கடைசி நேரத்தில் எல்லோரும் வியக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி தி.மு.க. வை ஆதரித்ததால் கனிமொழி வெற்றி பெற்றார். இந்த விஷயத்தில் தே.மு.தி.க.வுக்கு காங்கிரஸ் மூலம் கிடைத்தது வெறும் ஏமாற்றமே.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்