முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிரியர் தகுதித் தேர்வு: ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்

திங்கட்கிழமை, 1 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை 1 - ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்று (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும். இதுவரை 5 1/2 லட்சம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து இருப்பதாக தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய அரசு கொண்டுவந்த இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களில் 15 ஆயிரம் காலி இடங்களை நிரப்பும் வகையில் ஆகஸ்டு மாதம் 17, 18-ந் தேதிகளில் தகுதித்தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த ஜூன் மாதம் 17-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். இதுவரை 7 லட்சத்து 20 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை ஆகி உள்ள நிலையில், ஏறத்தாழ 5 1/2 லட்சம் பேர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்துள்ளனர்.

ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கனவே அறிவித்தபடி, தகுதித்தேர்வுக்கு விண்ணப்பங்களை வழங்கவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளவும் நேற்று (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும். 

விண்ணப்பங்களை மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றாலும் வரிசையில் நிற்கும் பலரின் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படாமல் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் கே.அறிவொளி தெரிவித்தார்.

விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளிக்க நேற்று கடைசி நாளானதால் ஆயிரக்கணக்கானோர்  குவிந்தனர். மாவட்டங்களிலுள்ள கல்வி அதிகாரிகள் அலுவலகத்தில் விண்ணப்பங்களை அளிக்க முன்வந்துள்ளதாகத் தெரிகிறது. சென்னையில் 5 கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டு, அரசு அலுவலர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களைப் பெற்றுக் கொண்டனர். இதற்காக தேர்வில் பங்கேற்க இருக்கும் ஆசிரியர்கள் நீண்டநேரம் வரிசையில் நின்று விண்ணப்பங்களை அளித்தனர். இதனால் விண்ணப்பங்களின் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டும் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்