முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

செவ்வாய்க்கிழமை, 2 ஜூலை 2013      அரசியல்
Image Unavailable

மதுரை, ஜூலை. 3 - என்.எல்.சி. எனப்படும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு தாரைவார்க்க துடிக்கும் மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று அ.தி.மு.க. சார்பில் முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டங்களில் லட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். 

என்.எல்.சி. நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்க துடிக்கும் மன்மோகன்சிங் அரசை கண்டித்தும், இந்த பங்குகளை விற்கும் பட்சத்தில் அதை தமிழக அரசுக்கு சொந்தமான பொதுத் துறை நிறுவனங்களுக்கு விற்பனை செய்யலாம் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்த யோசனை பற்றி சாதகமான முடிவெடுக்காத மத்திய அரசை கண்டித்தும், தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். புதுச்சேரியிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். 

முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பின்படி நேற்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்த ஆர்ப்பாட்டங்களில் லட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கழக அமைப்பு செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். அம்மாவின் கோரிக்கையை நிறைவேற்று என்று அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். 

திருவள்ளூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வேணுகோபால் தலைமை தாங்கினார். இதே போல் காஞ்சிபுரத்தில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையிலும், விழுப்புரம் வடக்கு, தெற்கு மாவட்டங்கள் சார்பில் ஏ.கே. கலைமணி தலைமையிலும், நெய்வேலியில் அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் ஆர். சின்னச்சாமி எம்.எல்.ஏ. தலைமையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. 

வேலூரில் அப்துல் ஹமீது தலைமையிலும், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்றன. சிவகங்கையில் அ.தி.மு.க.வினர் முக்கிய வீதிகள் வழியாக பேரணி நடத்தி தபால் நிலையம் முன்பு பாண்டுரெங்கன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். நெல்லை ரயில் நிலையம் முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கழக அமைப்பு செயலாளர் பி.எச். பாண்டியன் தலைமை தாங்கினார். 

ராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா தலைமையிலும், கரூரில் தம்பித்துரை எம்.பி. தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அப்போது துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. 

சேலத்தில் செம்மலை எம்.பி. தலைமையிலும், திருச்சியில் சசிகலா புஷ்பா தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. மதுரை தலைமை தபால் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தை ஜஸ்டின் செல்வராஜ் துவக்கி வைத்தார். தூத்துக்குடியில் ஜெனிபர் சந்திரன் தலைமையிலும், திண்டுக்கல்லில் கே.ஏ.கே. முகில் தலைமையிலும், திருவண்ணாமலையில் மனோஜ்பாண்டியன் எம்.பி. தலைமையிலும், விருதுநகரில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையிலும், தஞ்சையில் துரை கோவிந்தராஜன் தலைமையிலும், கோவையில் ஏ.கே. செல்வராஜ் தலைமையிலும், திருப்பூரில் நாஞ்சில் சம்பத் தலைமையிலும், ஈரோட்டில் கோகுல இந்திரா தலைமையிலும், நீலகிரியில் கமலகண்ணன் தலைமையிலும், கிருஷ்ணகிரியில் மைத்ரேயன் எம்.பி. தலைமையிலும், தேனியில் தவசி தலைமையிலும், நாகையில் கு. தங்கமுத்து தலைமையிலும், தருமபுரியில் அன்பழகன் தலைமையிலும், புதுக்கோட்டையில் ம. ராசு தலைமையிலும், நாமக்கல்லில் முன்னாள் அமைச்சர் பொன்னையன் தலைமையிலும் அ.தி.மு.க சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. தமிழகம் முழுவதும் நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டங்களில் லட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் எழுச்சியோடு கலந்து கொண்டு மத்திய காங்கிரஸ் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். புதுச்சேரியிலும் நேற்று இந்த ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்