முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதிகள் மிரட்டல் - அயோத்தியில் பலத்த பாதுகாப்பு

புதன்கிழமை, 4 மே 2011      இந்தியா
Image Unavailable

 

அயோத்தி,மே.4 - ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதை அடுத்து தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்திருப்பதாலும், இன்டர்போல் அமைப்பு எச்சரிக்கை விடுத்திருப்பதாலும் அயோத்தி நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு வாகன சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

அமெரிக்காவில் இரட்டை கோபுரம், பென்டகன் உள்ளிட்ட இடங்களை தாக்கி கிட்டத்தட்ட 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாவதற்கு காரணமான சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடனை ஒழித்துக் கட்டியே தீருவது என்று அமெரிக்கா கங்கணம் கட்டி அவனை தேடி வந்தது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவின் கனவு தற்போது நனவாகி இருக்கிறது. 

பாகிஸ்தானில் சொகுசு பங்களா ஒன்றில் பதுங்கியிருந்த தீவிரவாதி பின்லேடனை அமெரிக்க படையினர் நேற்று முன்தினம் ஹெலிகாப்டர் மூலம் குண்டுமழை பொழிந்தும், கடும் சண்டை மூலம் துப்பாக்கியால் சுட்டும் கொன்றனர். அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த பின்லேடன் கதை நேற்று முன்தினத்தோடு ஒரு முடிவுக்கு வந்தது. அவனது உடலை இறுதி சடங்குகளுக்கு பிறகு அதிக எடையுள்ள பெட்டியில் வைத்து கடலுக்கு அடியில் புதைத்து விட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அவனுக்கு யாரும் நினைவிடம் வைத்து வழிபட்டு விடக் கூடாது என்பதற்காக பின்லேடனின் உடல் கடலில் புதைக்கப்பட்டதாக அமெரிக்கா கூறுகிறது. 

ஆனால் எந்த இடத்தில் பின்லேடன் உடல் புதைக்கப்பட்டது என்பதை அமெரிக்கா தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் பின்லேடன் கொல்லப்பட்டதால் தலிபான் தீவிரவாதிகள் கடும் ஆத்திரத்தில் உள்ளனர். பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரியை கொல்லப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அமெரிக்காவை தாக்குவோம் என்றும் அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். பின்லேடன் கொல்லப்பட்டதை அடுத்து உலகின் பல இடங்களில் தாக்குதல் நடத்தப்பட கூடும் என்று இன்டர்போல் அமைப்பு எச்சரித்துள்ளது. 

இதையடுத்து இந்தியாவின்பல இடங்களில் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, உ.பி. மாநிலம் அயோத்தியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காரணம், அயோத்தி ஒரு பதட்டமான இடம். பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு இங்கு எப்போதுமே பெரும்பாலும் பதட்டம் தான் நிலவுகிறது. தற்போது பின்லேடன் கொல்லப்பட்ட நிலையில் பதட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதையடுத்து அங்கு போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது. வாகன சோதனை தீவிரமாக நடைபெறுகிறது. வெடிகுண்டுகளை செயலிழக்கும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். மோப்ப நாய்கள் துணையுடன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாகனசோதனையால் மக்களுக்கு இடர்பாடு ஏற்பட்டாலும் கூட அது நன்மைக்கே என்று மக்கள் நினைக்கிறார்கள். அதனால் அவர்களும் ஒத்துழைப்பு தருகிறார்கள். பின்லேடன் கொல்லப்பட்டதை அடுத்து பாகிஸ்தானில் அமெரிக்க தூதரகங்கள் மூடப்பட்டுள்ளன. இஸ்லாமாபாத்தில் அமெரிக்க தூதரகமும், பெஷாவர், கராச்சி, லாகூர் போன்ற இடங்களில் அமெரிக்க துணை தூதரகங்களும் மூடப்பட்டுள்ளன. மறு உத்தரவு வரும் வரை மக்கள் செல்லக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பின்லேடன் பாகிஸ்தானில் இருந்தது தங்களுக்கு தெரியவே தெரியாது என்கிறார் அந்நாட்டின் அதிபர் ஜர்தாரி. ஆனால் இதை அமெரிக்கா நம்பத் தயாராக இல்லை. பாகிஸ்தான் இரட்டை வேடம் போடுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. பாகிஸ்தான் ஆதரவு இல்லாமல் அவன் எப்படி அங்கு தங்க முடியும் என்று அமெரிக்கா கேள்வி எழுப்பியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்