முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிரியர் தகுதித் தேர்வு: ரூ.3 கோடிக்கு விண்ணப்பம் விற்பனை

வியாழக்கிழமை, 4 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.5 - ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பங்கள்  மொத்தம் ரூ.3 கோடியே 69 லட்சம் விற்பனையாகி உள்ளது.தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் ஆசிரியர்கள் தகுதியானவர்களாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு கல்வி உரிமை சட்டத்தில் வலியுறுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.

1 முதல் 5-ம் வகுப்பு வரை ஆசிரியர் பணியாற்ற கல்வித்தகுதி படைத்தவர்கள் தாள்-1, 6 முதல் 8-ம் வகுப்பு வரையும், ஆசிரியர் பணியாற்ற விரும்பும் பட்டதாரிகள் தாள்-2 தேர்வுகளை எழுத வேண்டும். தாள்-1 தேர்வு ஆகஸ்ட் 17-ந் தேதியும், தாள்-2 தேர்வு 18-ந் தேதியும் நடைபெறுகிறது.

இந்த தேர்வுக்கான விண்ணப்பங்கள் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் ஜுன் 17-ந் தேதி முதல் ஜுலை 1-ந் தேதி வரை விற்பனை செய்யப்பட்டது. விண்ணப்பத்தின் விலை ரூ.50. மொத்தம் 7 லட்சத்து 38 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் விற்பனையாகி உள்ளது. இதில் மொத்தம் 6 லட்சத்து 85 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதன் மூலம் ரூ.3 கோடியே 69 லட்சம் கிடைத்துள்ளது. தகுதிதேர்வுக்கு ஆர்வத்துடன், முதல் தாளுக்கு 2 லட்சத்து 65 ஆயிரத்து 568 பேரும், இரண்டாம் தாளுக்கு 4 லட்சத்து 19 ஆயிரத்து 898 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்பங்கள் அனைத்தும் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள ஆசிரியர் வாரியத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அடுத்த சில வாரங்களில் விண்ணப்பங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு அதில் உள்ள தகவல்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். விண்ணப்பதாரர்களுக்கு ஹால் டிக்கெட் தபாலில் அனுப்பபடமாட்டாது. இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும் என்று தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தேர்வுகளுக்கு ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஹால் டிக்கெட் பதிவேற்றம் செய்யப்படும்.

இணையதளத்தில் தங்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 6 லட்சத்து 56 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இந்த ஆண்டு 29 ஆயிரம் பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தை தினமும் கண்காணிக்க வேண்டும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்