முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ணா தண்ணீர் ஜீரோ பாயிண்டுக்கு இன்று வந்து சேரும்

வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.6 - சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீராதாமான கிருஷ்ணா கால்வாயில் வரும் தண்ணீர் தமிழக எல்லையான  ஜீரோ பாயிண்டுக்கு இன்று வந்து சேரும் என்று கூறப்படுகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரிக்கு ஆந்திராவில் உள்ள கண்டலேறு ஆணையில் இருந்து ஆண்டுதோறும் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். உப்பலமதகு என்ற இடத்தில் கிருஷ்ணா கால்வாயில் உடைப்பு ஏற்பட்டிருந்ததால் அதில் கடந்த 2 மாதமாக கிருஷ்ணா தண்ணீர் நிறுத்தப்பட்டது. இப்போது உடைப்பு ஏற்பட்ட இடத்தில் புதிதாக கண்மாய் கட்டப்பட்டுள்ளது. பழுது பார்க்கப்பட்டுள்ளது. இந்த பணி முழுமையாக முடிவடைந்ததால் கடந்த 1-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

அதில் வினாடிக்கு 500 கன அடி வீதம் கால்வாய் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. கண்டலேறு அணையில் இருந்து தமிழக எல்லையான ஜீரோ பாயிண்ட் வரை கிருஷ்ணா கால்வாயின் நீளம் மொத்தம் 153 கிலோ மீட்டர் ஆகும். இதில் 121 கி.மீட்டர் தூரத்தை கடந்து, கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் நீண்ட நாட்களாக கால்வாயில் தண்ணீர் இல்லாததால் புதிதாக வரும் தண்ணீர் மண்ணில் இழுக்கப்பட்டுள்ளது. அதனால் தண்ணீர் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வது தாமதமானது.

உடைப்பு ஏற்பட்டு சரிசெய்யப்பட்டுள்ள பகுதியை உப்பலமதகு கிருஷ்ணா தண்ணீர் நேற்று காலை கடந்தது. எனவே, இன்னும் 30 கி.மீட்டர் தூரம் கடந்தால் தமிழக எல்லையான ஜீரோ பாயிண்டுக்கு தண்ணீர் வந்து சேரும். அனேகமாக இன்று காலை வரும் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜீரோ பாயிண்ட்டில் இருந்து பூண்டி ஏரிக்கு 25 கிலோ மீட்டர் தூரம்தான் உள்ளது. தண்ணீர் வரும் வேகத்தை கணக்கிட்டால் 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தான் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து சேரும் என தெரிகிறது.

கிருஷ்ணா கால்வாய் ஆங்காங்கே கடுமையாக சேதமடைந்து காணப்படுகிறது. பல இடங்களில் சிமெண்ட் கரைகள் சரிந்து கால்வாய்க்குள் கிடப்பதால் தண்ணீரின் வேகம் தடைப்படுகிறது. மேலும் இருபுறமும் செடி, மரங்கள் முளைத்துள்ளதால் கரைகள் வலுவிழந்து உள்ளன. இதனால் தண்ணீரின் வேகம் குறைந்து ஆமை வேகத்தில் கால்வாயில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்