முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மேனன் இலங்கை செல்கிறார்

சனிக்கிழமை, 6 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

கொழும்பு,ஜூலை.7 - இந்தியா,இலங்கை மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கிடையே முத்தரப்பு ராணுவ ஒப்பந்தம் செய்து கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் விரைவில் கொழும்பு செல்கிறார். 

சீனாவின் ராணுவ பலம் அதிகரிக்க அதிகரிக்க இந்தியாவின் அண்டை நாடுகள் விவகாரத்தில் தலையிட சீனா ஆரம்பித்துள்ளது. முதலில் நமது எதிரி நாடான பாகிஸ்தானுடன் நல்லுறவை வளர்த்துக்கொண்டு அந்த நாடு அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து குவித்துக்கொள்ள உதவி செய்து வருகிறது. அதோடுமட்டுமல்லாது ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் சீனா தனத ராணுவத்தை நிறுத்தியுள்ளது. காஷ்மீர் பகுதியிலும் அடிக்கடி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே திபெத்தை கபலீகரம் செய்துள்ள சீனா, தற்போது பூடான், நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளையும் கபலீகரம் செய்யும் முயற்சியில் சீனா இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக இலங்கையுடன் பல ஒப்பந்தங்களை செய்துள்ளது. சீனாவின் ஆதரவை வைத்துக்கொண்டு இந்தியாவை இலங்கை மிரட்ட பார்க்கிறது. தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவை நீக்க இலங்கை அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 

இந்தநிலையில் இலங்கை பொருளாதார வளர்ச்சித்துறை அமைச்சரும் அதிபர் ராஜபக்சேயின் இளைய சகோதரருமான பசில், இந்தியாவுக்கு வந்து இந்திய உதவியுடன் செயல்படுத்தப்பட உள்ள சில திட்டங்களை நிறைவேற்றித்தர தலைவர்களை சந்தித்து வற்புறுத்தினார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தையும் சந்தித்து பேசினார். அப்போது தமிழர்களுக்கு அதிகார பங்கீடு அளிக்க வகை செய்யும் இலங்கை அரசியல் சட்டப்பிரிவு 13-ல் திருத்தம் கொண்டுவர குர்ஷித் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. டெல்லியில் சிவசங்கர் மேனன், இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஆகியோர்களையும் பசில் சந்தித்து பேசினார். இதனையொட்டி இந்தியா,இலங்கை, மாலத்தீவு ஆகிய நாடுகளுடன் முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் விரைவில் இலங்கை செல்லவிருப்பதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையில் இந்திய தூதராக சிவசங்கர் மேனன் பணிபுரிந்தவர். அதனால் இலங்கையின் நிலவரம் குறித்து மேனனுக்கு தெளிவாக தெரியும். மேலும் இலங்கை வெளியுறவு அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளதை அடுத்து அங்கு மேனன் செல்கிறார். இதை இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்