முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.பி.ஐ. சம்மன் - சோகத்துடன் கனிமொழி புது டெல்லி பயணம்

வியாழக்கிழமை, 5 மே 2011      அரசியல்
Image Unavailable

மதுரை,மே.5 - சி.பி.ஐ. சம்மன் அனுப்பியதை தொடர்ந்து தற்போது அமலாக்கப் பிரிவு இயக்குனரகமும் சம்மன் அனுப்பியதை அடுத்து மிகுந்த சோகத்துடன் கனிமொழி நேற்று டெல்லிக்கு பயணமானார். அவருடன் தி.மு.க. எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவனும் மற்றும் ஏ.கே.எஸ். விஜயனும் உடன் சென்றனர். நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கி முன்னாள் அமைச்சர் ராசா கைதாகி தற்போது டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் ஆர்.கே. சந்தோலியா, சித்தார்த்த பெகுரா, சாஹித் உஸ்மான் பல்வா ஆகியோரும் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். பிறகு 5 முக்கிய நிறுவன அதிகாரிகளும் கைது செய்யப்பட்டு அவர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில்தான் கடந்த ஏப்ரல் மாதம் 2 ம் தேதி இந்த வழக்கில் முதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த குற்றப்பத்திரிக்கை 80 ஆயிரம் பக்கங்களை கொண்டதாக இருந்தது. அதன் பிறகு ஏப்ரல் இறுதிவாக்கில் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த குற்றப்பத்திரிக்கையில் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியின் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது. டி.பி. ரியாலிட்டி நிறுவனத்திடம் இருந்து சினியுக் நிறுவனம் வழியாக கலைஞர் டி.விக்கு ரூ. 214 கோடி கைமாறிய விவகாரம் தொடர்பாக கனிமொழியிடமும், தயாளு அம்மாளிடமும் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. காரணம், கனிமொழிக்கு கலைஞர் டி.வியில் 20 சதவீத பங்குகளும், தயாளு அம்மாளுக்கு 60 சதவீத பங்குகளும் டி.வியின் நிர்வாக இயக்குனர் சரத்குமாருக்கு 20 சதவீத பங்குகளும் உள்ளன. அதனால்தான் ரூ. 214 கோடி கைமாறிய விவகாரத்தில் கனிமொழியிடமும், தயாளுவிடமும் சி.பி.ஐ விசாரணை நடத்தியது. 

இந்த விசாரணைக்கு பிறகே கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் கனிமொழி பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் தயாளுவின் பெயர் சேர்க்கப்படவில்லை. கனிமொழி ஒரு கூட்டு சதியாளர் என்று அந்த குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஏற்கனவே சி.பி.ஐ கனிமொழிக்கு சம்மன் அனுப்பி 6 ம் தேதி ஆஜராக வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தது. பிறகு தற்போது அமலாக்கப் பிரிவு இயக்குனரகமும் கனிமொழிக்கு சம்மன் அனுப்பி உள்ளது. இப்படியாக சம்மன் மேல் சம்மன் தனக்கு வந்ததால் கனிமொழி சோகத்துடன் காணப்பட்டார். 

அந்த சோகத்துடன் நேற்று அவர் டெல்லிக்கு பயணமானார். கிங்பிஷர் விமானத்தில் காலை 6.45 மணிக்கு அவர் சென்னையில் இருந்து புறப்பட்டு டெல்லி சென்றதாக தகவல்கள் கூறுகின்றன. அவருடன் அவரது கணவரும், மகனும் புறப்பட்டு சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தி.மு.க எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன், ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோரும் உடன் புறப்பட்டு சென்றனர். முன்னதாக இந்த சம்மன் விவகாரத்தை அடுத்து கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் சட்ட நிபுணர்களோடு முதல்வர் கருணாநிதி, தனது சி.ஐ.டி. காலனி இல்லத்தில் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் நேரு, பொன்முடி, ஏ.வ. வேலு உட்பட பலரும் கலந்து கொண்டார்கள். அப்போது பல ஆண்டுகளாக நம்பிக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி தங்களை கைவிட்டு விட்டதாக கூட்டத்தில் பேசியவர்கள் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக அமலாக்கப்பிரிவும் சம்மன் அனுப்பியிருப்பது தி.மு.க. தலைவர்களை அப்செட்டாக வைத்துள்ளது. அவர்கள் கலங்கிப் போயிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த கலக்கமான சூழ்நிலையில்தான் முதல்வரின் மகள் கனிமொழி சோகத்துடன் டெல்லிக்கு பறந்திருக்கிறார். எந்த நேரத்திலும் கனிமொழி கைது செய்யப்படலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்