முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனிமொழியுடன் நாளை கருணாநிதியும் கோர்ட்டுக்கு செல்வாரா?

வியாழக்கிழமை, 5 மே 2011      அரசியல்
Image Unavailable

சென்னை,மே.5 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக முதல்வர் கருணாநிதி மகள் கனிமொழிக்கு சம்மன் மேல் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். நாளை 6 ம் தேதி இந்த ஊழல் வழக்கு தொடர்பாக அவர் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகிறார். அதற்கு பிறகு அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த நிலையில் கனிமொழி சி.பி.ஐ. கோர்ட்டில் நாளை ஆஜராகும் போது முதல்வர் கருணாநிதியும் தன் மகளுடன் துணைக்கு செல்வார் என்று சென்னை வட்டாரங்கள் கூறுகின்றன. இருந்தாலும் கருணாநிதியின் பயண திட்டம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. கடைசி நேரத்தில் அவர் எந்த முடிவையும் எடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

இது போன்ற இக்கட்டான நேரங்களில் தன் மகளுக்கு தார்மீக ஆதரவு கொடுக்கவே முதல்வர் கருணாநிதி நினைப்பாராம். அந்த வகையில் அவர் டெல்லி சென்று மகளுடன் கோர்ட்டுக்கும் செல்லலாம் என்று பெயர் சொல்ல விரும்பாத ஒரு தி.மு.க. அமைச்சர் தெரிவித்தார். ஏற்கனவே மத்திய அமைச்சர் அழகிரி டெல்லியில் இருக்கிறார். கனிமொழி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டுக்கு செல்லும் போது அழகிரியும் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் கருணாநிதியின் உடல் நிலையை காரணம் காட்டி நீங்கள் டெல்லிக்கு வர வேண்டாம் என்று அவரது மகள் கனிமொழி உட்பட குடும்பத்தினர் அனைவரும் கூறுகிறார்களாம். ஆனால் கருணாநிதி எந்த முடிவை எடுப்பார் எனத் தெரியவில்லை. பெரும்பாலும் அவர் டெல்லி சென்று மகளுடன் துணைக்கு செல்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ராசாவுக்கு ஆதரவாக வாதாட பிரபல வழக்கறிஞர் ஜெத்மலானி ஆரம்பத்தில் மறுத்து விட்ட நிலையில் கனிமொழிக்காக அவர் ஆஜராக சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் ஆஜரானால் இந்த வழக்கில் சூடுபிடிக்கும். கனிமொழிக்கு ஆதரவாக இந்த வழக்கில் ஆஜராகும்படி ஜெத்மலானியிடம் தி.மு.க. முக்கிய புள்ளிகள் மன்றாடி கேட்டுக் கொண்டார்களாம். இதையடுத்தே ஜெத்மலானி ஒப்புக் கொண்டதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்