முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேருந்து மோதி பலியான 3 பேரின் குடும்பங்களுக்கு நிதியுதவி

திங்கட்கிழமை, 8 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.9 - அரசு பேருந்து மோதியதில் விபத்துக்குள்ளாகி பலியான மூன்றுபேரின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக  முதலமைச்சர்  ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், கீழ்பத்துப்பட்டு மதுரா மஞ்சக்குப்பம் கிராமம் அருகே  23.6.2013 அன்று இரு சக்கர வாகனத்தின்   மீது அரசுப் பேருந்து மோதியதில், இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த சென்னை, ஆவடியைச் சேர்ந்த பாண்டுரங்கன் என்பவரின் மகன் ரஜினி மற்றும் கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், பத்திரக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ராஜவேலு என்பவரின் மகன் மேகநாதன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியையும்; 

மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், கூ.கல்லுப்பட்டி, சோலைப்பட்டி கிராமம் அருகே 24.6.2013 அன்று சாலையில் நடந்து  சென்று கொண்டிருந்த  ஏ.அம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்த  ராமர் என்பவர் மீது  அரசுப் பேருந்து மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். 

இந்த சாலை விபத்துகளில் அகால மரணமடைந்த ரஜினி, மேகநாதன் மற்றும் ராமர் ஆகியோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்த துயர சம்பவங்களில்  உயிரிழந்த ரஜினி, மேகநாதன் மற்றும் ராமர் ஆகியோரின் குடும்பங்களுக்கு  முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா   ஒரு லட்சம் ரூபாய் வழங்க  நான்  உத்தரவிட்டுள்ளேன். 

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்