முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். கிரிக்கெட் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

வியாழக்கிழமை, 5 மே 2011      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, மே.5 - சென்னையில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வென்றது. இந்த வெற்றி சென்னை அணிக்கு கிடைத்துள்ள 6வது வெற்றியாகும். ​ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி அதில் 5 வெற்றிகளை பெற்றிருந்தது. யுவராஜ்சிங் தலைமையிலான புனே வாரியர்ஸ் அணியுடன் மோதிய முதல் ஆட்டத்தில் 25 ரன்கள் எனவும், 2வது முறை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் 2 முறை வெற்றி கண்டுள்ளது. கொல்கத்தா அணியை 2 ரன்கள் வித்தியாசத்திலும், பெங்களூர் அணியை 21 ரன்கள் வித்தியாசத்திலும், டெக்கான் சார்ஜர்ஸ் அணியை 19 ரன்கள் வித்தியாசத்திலும் வென்று மொத்தம் 5 வெற்றிகளை பெற்றிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று சென்னையில் நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. 

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய வாட்சன் மற்றும் திராவிட் ஆகிய இருவரும் அபாரமாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு நல்ல துவக்கத்தை ஏற்படுத்தி தந்தனர். 10 ஓவர்கள் வரை களத்தில் நின்ற இந்த ஜோடியில் 32 ரன்களை பெற்றுத்தந்த வாட்சன், ஜகாத்தியின் பந்துவீச்சில் அவரிடமே பிடிகொடுத்து வெளியேறினார். அப்போது ராஜஸ்தான் அணி 86 ரன்களை பெற்றிருந்தது.

அடுத்து திராவிட்டுடன் ஜோடி சேர்ந்த மெனேரியா 2 ரன்களிலும், போத்தா 8 ரன்களிலும் ஆட்டமிழந்து திரும்பினர். அரை சதத்தை கடந்து 66 ரன்களுக்கு உயர்ந்த திராவிட், ரந்தீவ் பந்துவீச்சில் விஜய்யிடம் பிடிகொடுத்து வெளியேறினார். திராவிட் 51 பந்துகளை எதிர்கொண்டு அதில் 10 பவுண்டரிகள் அடித்து 66 ரன்களை பெற்றார்.

பின்னர் வந்தவர்களில் டெய்லர் மட்டுமே அதிகமாக 20 ரன்களை எடுக்க ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ரன்களை எடுத்தது.

வெற்றி பெற 148 ரன்கள் தேவை என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர்களான ஹஸ்சியும், முரளிவிஜயும் நல்ல துவக்கம் அமைத்து தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் ராஜஸ்தான் வீரர்கள் 4 பேரை தனது அபார கேட்ச் மூலம் ஆட்டமிழக்கச்செய்த விஜய், பேட்டிங்கிலும் பிரகாசிப்பார் என எதிர்பார்த்ததில் தவறில்லை. ஆனால், இவர் 5 ரன்களே பெற்றுத்தந்தபோது போத்தா பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூவாகி வெளியேறினார். 

இதன்பிறகு மைக்கேல் ஹசியும், சுரேஷ் ரெய்னாவும் ஜோடி சேர்ந்து அதிரடி தாக்குதல்கள் நடத்தினர். வாட்சன், வார்னே, போத்தா ஆகியோரது பந்துவீச்சுகளை எல்லாம் லாவகமாக எதிர்கொண்டு ரன்களை குவித்தனர். இந்த ஜோடி 145 ரன்கள் வரை சேர்த்து இன்னும் 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்றநிலையில் ரெய்னாவை திரிவேதி அவுட்டாக்கினார். 51 பந்துகளை எதிர்கொண்டு ஒரு அபார சிக்சர், 3 பவுண்டரிகள் அடித்து 61 ரன்களை பெற்றுத்தந்தார் சுரேஷ் ரெய்னா.

ரெய்னா ஆட்டமிழந்ததும், அல்பி மார்கல் ஹஸ்சியுடன் ஜோடி சேர்ந்தார். அடுத்து ஹஸ்சி ஒரு பவுண்டரி அடித்து சென்னை அணியை வெற்றி பெறச்செய்தார். மைக்கேல் ஹஸ்சி 55 பந்துகளை எதிர்கொண்டு அதில் ஒரு சிக்சர், 8 பவுண்டரிகள் அடித்து மொத்தம் 79 ரன்களை பெற்றுத்தந்தார்.

முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்களை எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி, சென்னை அணிக்கு கிடைக்கும் 6வது வெற்றியாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்