முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேகமூட்டத்துடன் தொடங்கிய கத்தரி வெயில்

வியாழக்கிழமை, 5 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம்,மே.5 - இந்த ஆண்டு நேற்று துவங்கிய கத்தரி வெயில்( அக்னி நட்சத்திரம்) மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆண்டுதோறும் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பது வழக்கம். அக்காலங்களில் தங்களை பாதுகாத்து கொள்ள மக்கள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவர். அதிகமாக தண்ணீர் குடிப்பது, பழங்களை சாப்பிடுவது, பழச்சாறுகளை குடிப்பது, இளநீர் மற்றும் குளிர்பானங்கள் ஆகியவற்றை அதிகமாக உட்கொள்வது வழக்கம். 

சிலர் வீடுகளின் மேல்தளத்தில் இரவு நேரங்களில் சாக்குகளை போட்டு தண்ணீர் ஊற்றுவதும் கூடுதலாக மின் விசிறிகளை இயக்கச் செய்தும் வெப்பத்தில் இருந்து தப்பித்து வருவர். இந்த கோடை காலத்தில் கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் வருவதும் வழக்கம். இக்காலத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் கொடூரமாக இருக்கும். 

குழந்தைகளுக்கும், முதியோர்களுக்கும் அம்மை போடுவதும், காலரா தாக்குவதும் வாடிக்கை. இந்த கத்தரி வெயில் எனப்படுவது 15 நாட்கள் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு இந்த கத்தரி வெயில் 25 நாட்கள் அதாவது, வருகிற 29 ம் தேதி வரை நீடிக்கும். கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அளவுக்கதிகமாக இருந்ததால், இந்த நாட்களை எப்படி கடத்துவது என மக்கள் பயத்தில் மூழ்கினர். 

இந்நிலையில் இயற்கையின் கருணையால் நேற்று துவங்கிய அக்னி நட்சத்திரம் மதுரையில் துளிகூட வெயிலின்றி வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அக்னி நட்சத்திரம் துவங்குவதற்கு முதல் நாளான நேற்று முன்தினம் இரவு மதுரையில் பலத்த காற்றுடன் நல்ல மழை கொட்டியது. இதனால் பூமி குளிர்ந்தது மட்டுமின்றி வெயிலின் தாக்கமும் இல்லை. மேலும் இந்த அக்னி நட்சத்திரம் உள்ள நாட்களில் இதே போன்று வானம் மேகமூட்டத்துடனோ அல்லது மழை பெய்தோ வருமேயானால் மக்கள் சூரியனால் பாதிக்கப்படாமல் சந்தோஷமடைவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்