முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோர்ஜி காண்டு ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி பலி

வியாழக்கிழமை, 5 மே 2011      அரசியல்
Image Unavailable

இட்டாநகர்,மே.5 - கடந்த சனிக்கிழமையன்று ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்ற அருணாசல பிரதேச முதல்வர் டோர்ஜிகாண்டுவின் கதி என்னவாயிற்று என்பது பற்றி இதுவரை தெரியாமலேயே இருந்து வந்தது. நேற்று கிட்டத்தட்ட 5 நாட்களுக்கு பிறகு அவர் விபத்தில் சிக்கி பலியானது ஊர்ஜிதமாகி இருக்கிறது. முதல்வர் டோர்ஜிகாண்டு சென்ற ஹெலிகாப்டர் லபோத்தாங் என்ற பகுதியில் விபத்துக்குள்ளானதில் முதல்வரின் உடல் சிதைந்த நிலையில் கிடப்பது ஒருவழியாக கண்டுபிடிக்கப்பட்டது. அவருடன் சென்ற மேலும் 4 பேரும் இந்த விபத்தில் சிக்கி உடல் சிதைந்து பலியானார்கள். ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியை போல டோர்ஜிகாண்டுவும் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானது அதிர்ச்சி அலைகளை நாடு முழுவதும் ஏற்படுத்தி உள்ளது. 

விபத்துக்கள் என்பது இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாகி விட்டது. நடந்து சென்றாலும் விபத்து ஏற்படுகிறது. சரி, பஸ்சில் செல்வோம் என்று பஸ்சில் பயணம் செய்தாலும் தறிகெட்டு செல்லும் டிரைவர்களால் விபத்து ஏற்பட்டு பல உயிர்கள் பலியாகின்றன. ரயிலில் பயணம் செய்வோமே என்று நினைத்து பயணம் செய்தால் அந்த ரயிலும் கூட விபத்தில் சிக்கி விடுகிறது. இதனால் வசதி உள்ளவர்கள் விமானத்தில் போகிறார்கள். ஆனால் விமானங்களும் நடுவானில் மோதிக் கொள்கின்றன. அல்லது ஏதேனும் ஒரு வகையில் விபத்தில் சிக்கி விடுகின்றன. சில விமானங்கள் தரையிறங்கும் நேரத்தில் கூட விபத்துக்கு உள்ளாகி விடுகின்றன. கர்நாடக மாநிலத்தில் சில மாதங்களுக்கு முன்பு மங்களூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் நேரத்தில் ஒரு விமானம் தறிகெட்டு ஓடி மலைப்பகுதிக்குள் விழுந்து கிட்டத்தட்ட 160 பேர் அப்போது பலியானார்கள். இப்படி எல்லா மார்க்கத்திலும் விபத்துக்கள் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. 

சில மாதங்களுக்கு முன் ஆந்திர முதல்வராக இருந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஹெலிகாப்டரில் சென்றார். ஆனால் அந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி நலமுல்லா வனப் பகுதியில் விழுந்து சுக்குநூறாக நொறுங்கி தீப்பிடித்தது. இதில் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி பரிதாபமாக உயிரிழந்தார். ஆந்திர மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு பெற்றவர் இவர். இந்த நிகழ்ச்சி நடந்து சில மாதங்கள்தான் ஆகின்றன. அதற்குள் மற்றொரு முதல்வர் பலியாகி விட்டார் என்பதுதான் வேதனைக்குரிய ஒரு விஷயமாகும். 

அருணாசல பிரதேச முதல்வராக இருந்தவர் டோர்ஜிகாண்டு. இவர் கடந்த சனிக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தவாங் என்ற இடத்தில் இருந்து தலைநகர் இட்டாநகர் நோக்கி புறப்பட்டார். காலை 9.50 மணிக்கு இவரது ஹெலிகாப்டர் புறப்பட்டது. 2 மணி நேரத்தில் இவர் இட்டாநகர் போய்ச் சேர வேண்டும். ஆனால் புறப்பட்ட சில நிமிடத்திலேயே அந்த ஹெலிகாப்டர் தரை கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த ஹெலிகாப்டரை பதட்டத்துடன் தேடினார்கள். சிறிது நேரத்தில் அந்த ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், பூடானில் அது தரையிறங்கியதாகவும் முதல்வர் உள்ளிட்ட 5 பேரும் பத்திரமாக இருக்கிறார்கள் என்றும் தகவல்கள் வெளியானது. 

ஆனால் இந்த தகவல் மறுநாளே பொய்த்துப் போனதுதான் வேதனைக்குரிய விஷயம். முதல்வர் காண்டு சென்று ஹெலிகாப்டர் பூடானில் தரையிறங்கவில்லை. இது உறுதியானதும் ராணுவ அதிகாரிகள் மற்றும்  மீட்பு படையினர் அங்குள்ள வனப்பகுதிகளுக்கு ஹெலிகாப்டரில் சென்று பரபரப்போடு தேடினார்கள். இந்த தேடும் பணி கிட்டத்தட்ட 4 நாட்கள் நீடித்தது. 4 நாட்கள் வரை முதல்வர் என்னவானார் என்பது பற்றி தெரியவே இல்லை. கடைசியாக நேற்று முன்தினம் முதல்வர் டோர்ஜிகாண்டு சென்ற ஹெலிகாப்டர் விழுந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இடத்தை நோக்கி மீட்பு குழுவினர் விரைந்தனர். 

4 நாட்கள் வரை முதல்வரோ அல்லது மற்றவர்களோ உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் ஹெலிகாப்டர் விழுந்த இடம் நோக்கி மீட்பு குழுவினர் சென்றனர். அப்போது முதல்வர் டோர்ஜிகாண்டு சென்ற ஹெலிகாப்டர் விழுந்த இடம் தெரியவந்து அங்கு சென்ற போது முதல்வரின் உடல் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவருடன் சென்ற பைலட்டுகள் பாபர், மம்மிக் ஆகியோரும் முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி யஷீசடோக் என்பவரும் தவாங் எம்.எல்.ஏவின் சகோதரி யஷீலாமூ என்பவரும் அங்கு சிதைந்த நிலையில் பலியாகி கிடந்தனர். 

பாராளுமன்ற ராஜ்யசபா எம்.பி. முகுத்பித்தி முதல்வர் பலியானதை உறுதி செய்தார்.  முன்னதாக அந்த பகுதி கிராமவாசிகள் விழுந்த கிடந்த ஹெலிகாப்டரின் சிதைந்த பாகங்களையும், அழுகிய நிலையில் கிடந்த உடல்களையும் கண்டு பிடித்து காலை 10 மணியளவில் பாதுகாப்பு ஏஜென்சிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இந்த இடம் ஷீலாபாஸ் என்ற இடத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது. அங்கு அருவி ஒன்று உள்ளது. அந்த அருவியின் பெயர் ஜோங் என்பதாகும். இந்த இடத்தில் இருந்துதான் ஹெலிகாப்டருடனான தொடர்பு கடைசியாக துண்டிக்கப்பட்டது. அந்த இடத்தில் முதல்வரும் மற்றும் நால்வரும் பலியானதை கிராமவாசிகளுடன் சேர்ந்து முகுத்பித்தி எம்.பி. ஊர்ஜிதம் செய்தார். 

டெல்லியில் இந்த தகவலை மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரமும் ஊர்ஜிதம் செய்தார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், டோர்ஜிகாண்டு பலியானதை உறுதி செய்தார். இவர் மட்டுமின்றி அருணாசல பிரதேச முதல்வர் டோர்ஜிகாண்டுவின் உறவினரும், பஞ்சாயத்து தலைவருமான மற்றொரு நபரும் டோர்ஜிகாண்டுவின் உடலை அடையாளம் கண்டறிந்து கூறினார். இந்த தகவலை மற்றொரு மத்திய அமைச்சரான ஹேன்டிக் தெரிவித்தார். இது பற்றி இட்டாநகரில் கூறிய அவர், 

பஞ்சாயத்து தலைவர் துப்தென், முதல்வரின் உடலை அடையாளம் கண்டறிந்து கூறியதாக தெரிவித்தார். விபத்தில் சிக்கி பலியான டோர்ஜிகாண்டுவுக்கு வயது 56. இவரது உடல் மட்டுமின்ற மற்ற நால்வரின் உடல்களும் அடையாளம் தெரியாத அளவுக்கு கருகிப் போயிருந்தன. இது பார்த்தவர் மனதை பதற வைத்தது. உருக வைத்தது. சம்பிராதயங்கள் அனைத்தும் பூர்த்தியான பிறகே அதிகாரபூர்வமாக தாங்கள் இச்செய்தி தெரிவிப்பதாக அமைச்சர் ஹேண்டிக் மேலும் தெரிவித்தார்.  அருணாசல பிரதேச முதல்வர் பலியானது அம்மாநிலத்தில் உள்ள மக்களை துயரக் கடலில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ஆந்திர மக்கள் மட்டுமின்றி உலக மக்கள் அனைவரையும் தன்பால் ஈர்த்த புட்டபர்த்தி சாய்பாபா தனது 85 வது வயதில் காலமானார். அந்த சோகம் முடிவதற்குள் இப்போது மற்றொரு சோகம் நிகழ்ந்து விட்டது என்பதுதான் வேதனைக்குரிய விஷயம். அருணாசல பிரதேச முதல்வர் பலியானதற்கு தேசிய தலைவர்கள், மாநில தலைவர்கள் அனைவரும் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.    

 

ஹெலிகாப்டர் மற்றும் விமான விபத்துக்களில் பலியான முக்கியமானவர்கள்:

 

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

என்.வி.என்.சோமு

மாதவராவ் சிந்தியா

ஜி.எம்.சி.பாலயோகி

செளந்தர்யா

ஹரியானா மின்துறை அமைச்சர்

ஒய்.எஸ்.ஆர்.ராஜசேகர ரெட்டி

 

ஹெலிகாப்டர் மற்றும் விமான விபத்துக்களில் தப்பிப் பிழைத்த முக்கிய புள்ளிகள்:

 

மொரார்ஜி தேசாய்

அகமது பட்டேல்

பிரிதிவிராஜ் சவான்

ராஜ்நாத்சிங்

முக்தர் அப்பாஸ் நக்வி

அசோக் கெல்லட்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்