முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை லீனா காதலர் சுகாஷ் மீது மேலும் மோசடி புகார்

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜூலை 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜூலை.22 - அம்பத்தூர் கனரா வங்கியில் ரூ. 19 கோடி மோசடி செய்த வழக்கிலும், தாம்பரம் சேலையூரைச் சேர்ந்த சக்ரவர்த்தி என்பவரிடம் ரூ. 72 லட்சம் சுருட்டிய வழக்கிலும் நடிகை லீனா கைது செய்யப்பட்டிருந்தார். இவரது காதலன் சுகாஷ் சந்திரசேகர் தலைமறைவாக இருந்த நிலையில், டெல்லி போலீசார் அவரை கொல்கத்தாவில் கைது செய்து சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

சுகாசிடம் மத்திய குற்றப் பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்திய போது பரபரப்பான வாக்குமூலம் கொடுத்திருந்தார். உழைத்து சம்பாதித்தால், சீக்கரம் பணக்காரன் ஆக முடியாது என்பதால் மோசடி செய்து பணம் சம்பாதிக்க குறுக்கு வழியை நாடியதாகவும் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று பொய் சொல்லி பல அரசியல்வாதிகளிடம் காரியம் சாதித்ததாகவும் சுகாஷ் கூறினார். அவரிடம் விரிவான வாக்குமூலம் வாங்கிய போலீசார் பின்னர் தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

சுகாஷ் சேலையூர் சக்கரவர்த்தியிடம் ரூ. 72 லட்சம் மோசடி செய்த வழக்கில் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார். அடுத்த கட்டமாக அம்பத்தூர் கனரா பாங்கியில் ரூ. 19 கோடி மோசடி செய்த வழக்கில் பாங்கி மானேஜரை சுகாஷ் எப்படி ஏமாற்றி பணம் பெற்றார் என்றும் போலீசார் விசாரிக்க உள்ளனர். இதில் பல தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

தற்போது சுகாஷ் மீது மத்திய குற்றப்பிரிவில் அடுக்கடுக்காக புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இது தவிர சென்னை சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகளும், மதுரை ஊமச்சிகுளம் போலீசில் 1 வழக்கும் பதிவாகி உள்ளது.

கோவை மத்திய குற்றப்பிரிவு, மதுரை ஊமச்சிகுளம் ஆகிய இடங்களிலும் புகார்கள் உள்ளன. இது தவிர கர்நாடக மாநிலத்தில் 8 மோசடி புகார்கள் சுகாஷ் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரளா, டெல்லி போலீசிலும் தலா ஒரு மோசடி வழக்கு உள்ளது. அனைத்து இடங்களிலும் ரூ. 50 கோடியில் இருந்து ரூ. 100 கோடி வரை சுகாஷ் மோசடி செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதில் ரூ. 7 கோடியை மட்டும் போலீசார் முடக்கி வைத்துள்ளனர். மீதி பணத்தை எங்கே யார்- யாரிடம் கொடுத்து வைத்துள்ளார் என்று போலீசார் விசாரிக்க உள்ளனர். இதில் சுகாஷ் தெரிவிக்கும் தகவலை வைத்து மோசடி பணத்தை கைப்பற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்