அருணாச்சல் பிரதேச புதிய முதல்வர் யார்?

P-Chidambaram

 

புதுடெல்லி, மே 6 - அருணாச்சல பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு ஹெலிகாப்டர் விபத்தில் பலியானதை அடுத்து புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில கவர்னர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். 

இதுகுறித்து டெல்லியில் நேற்று செய்தியாளர்களுக்கு சிதம்பரம் பேட்டியளித்தார். அப்போது அவர் டோர்ஜியின் மறைவிற்கு தனது ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்துக்கொண்டார். புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அருணாச்சல் பிரதேச கவர்னர் ஜே.ஜே.சிங் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

முன்னதாக விபத்தில் சிக்கிய முதல்வர் டோர்ஜியின் உடல் அதிகாரிகளாலும் குடும்பத்தினராலும்  அடையாளம் காணப்பட்டது. பின்னர் அவரது உடல் இட்டாநகருக்கு கொண்டுவரப்பட்டு அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இன்று அருணாச்சல் பிரதேசத்தில் தேசிய கொடிகள் அனைத்தும் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும். டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களிலும் தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மறைந்த முதல்வர் டோர்ஜிக்கு இன்று இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் செய்யப்படுகின்றன. மத்திய அமைச்சரவையும் டோர்ஜியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் காரிய கமிட்டியும் தனது இரங்கலை டோர்ஜியின் குடும்பத்திற்கு  தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ