சபரிமலை விவகாரம் - ஹரிஹரன் நாயர் விசாரணை நடத்துவார்

Sabarimala

திருவனந்தபுரம், மே 6 - புல்மேட்டு பாதையில் நெரிசலில் சிக்கி 102 ஐயப்ப பக்தர்கள் பலியானது குறித்து கேரள ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி எம்.ஆர். ஹரிஹரன்நாயர் விசாரணை நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 14 ம் தேதி மகரசங்கராந்தி தினத்தன்று ஐயப்ப பக்தர்கள் கேரளாவில் உள்ள ஸ்ரீ சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர். அப்போது சபரிமலைக்கும் வண்டிப்பெரியாருக்கும் இடையே காட்டுப்பாதையில் தள்ளுமுள்ளு மற்றும் நெருக்கடி ஏற்பட்டதில் சுமார் 102 ஐயப்ப பக்தர்கள் பரிதாபமாக பலியானார்கள். ஜீப் ஒன்று தறிகெட்டு ஓடியதாலும், பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததாலும் இந்த விபத்து நேர்ந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்று கேரள அரசு அறிவித்திருந்தது. அதுமட்டுமல்ல, கேரள ஐகோர்ட்டில் தற்போது பணியாற்றிக்கொண்டிருக்கும் நீதிபதி ஒருவரின் சேவையையும் அரசு கோரியது. ஆனால் கேரள ஐகோர்ட் இந்த விசாரணை நடத்துவதற்கு பணியில் இருக்கும் நீதிபதியை அமர்த்துவதில் உள்ள சங்கடங்களை சுட்டிக்காட்டியது. இதையடுத்து ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிப்பது என்று முடிவானது. இதுகுறித்து திருவனந்தபுரத்தில் நேற்று கேரள அமைச்சரவை கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க கேரள ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி எம்.ஆர்.ஹரிஹரன் நாயரை நியமிப்பது என்று முடிவானது. எனவே இந்த சம்பவம் குறித்து நீதிபதி ஹரிஹரன்நாயர் இனி விசாரணை நடத்துவார். நெருக்கடி எப்படி ஏற்பட்டது. அதற்கான சந்தர்ப்ப சூழ்நிலைகள் என்ன என்பது குறித்து அவர் விசாரிப்பார். பிறகு அரசிடம் அறிக்கை தாக்கல் செய்வார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ