முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவியை நிறுத்த எம்.பிக்கள் வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 6 மே 2011      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன்,மே.6 - பாகிஸ்தானுக்கு ஆயுத சப்ளை செய்வதை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்று அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதற்காக தனியாக ஒரு சட்டத்தை கொண்டு வரவும் முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் இஸ்லாமாபாத்துக்கு வழங்கப்படும் அனைத்து வகையான உதவிகளையும் நிறுத்த முடியும். 

பாகிஸ்தானில் பின்லேடன் தங்கியிருந்ததை தெரிவிக்காமல் இருந்த காரணத்தை பாகிஸ்தான் அரசு அறிவிக்க வேண்டும். அதுவரை உதவிகளை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர். பயங்கரவாதியான ஒசாமா பின்லேடனை தனது ராணுவ பயிற்சி அகாடமிக்கு அருகிலேயே தங்கியிருந்தது பாகிஸ்தானுக்கு எப்படி தெரியாமல் போனது என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். பின்லேடனுக்கு என்றே பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட அந்த பங்களாவை தெரியாது என்று கூறுவது ஏற்க இயலாது என்று ஒரு எம்.பி. கூறினார். 

தங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்று பாகிஸ்தான் கூறுவதில் இருந்தே அவர்களை பின்லேடன் வாங்கி விட்டார் என்று தெளிவாகிறது. பின்லேடனை தன் நாட்டுக்குள் வைத்திருந்ததை தொடர்ந்து பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடாக கருதப்படுகிறது. பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புக்கு இந்த விவரம் தெரியாமல் போனது பெரிய வேடிக்கை என்றும் எம்.பிக்கள் குறிப்பிட்டனர். 

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. யின் செயல்பாடு இதன் மூலம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த நிகழ்வுக்கு முன் பாகிஸ்தான், அமெரிக்க உறவு வலுவாக இருந்தது. தற்போது பாகிஸ்தானை எப்படி நம்புவது என்ற கேள்வி எழுந்துள்ளது. பொறுமையோடு அமெரிக்கா இருந்தாலும் பாகிஸ்தானுடனான உறவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்பது பிரதான விவகாரமாக எழுந்துள்ளது என்று பெரும்பான்மையான உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர். பயங்கரவாதத்திற்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை பாகிஸ்தானோடு இணைந்து மேற்கொள்ள வேண்டாம் என்பதையே இது உணர்த்துகிறது. அதன் செயல் அமெரிக்காவை வெகுவாக பாதித்து விட்டது. பயங்கரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கோடிக்கணக்கில் நிதியுதவி அளித்தது. அத்துடன் அந்நாட்டின் இக்கட்டுகள் ஏற்படும் போது உதவிகளை அமெரிக்கா தராளமாக செய்தது. 

அமெரிக்கா அளித்த நிதியுதவியும், பொருளாதார உதவியும் இப்போது எங்கே போனது. அமெரிக்காவின் முதல் எதிரியாக கருதப்பட்டவருக்கு தஞ்சம் அளித்ததன் மூலம் அமெரிக்காவை பாகிஸ்தான் எந்தளவுக்கு கருதி வந்தது என்பது இப்போது தெரிய வருகிறது. அமெரிக்காவுக்கு மிக பெரிய தர்மசங்கடத்தை பாகிஸ்தான் ஏற்படுத்தி விட்டது. இந்நிலையில் அந்த நாட்டுடன் உறவு தேவையா என்பது கேள்விக்குறியாகி விட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்