முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ரொக்கப் பரிசு - முதல்வர் வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 6 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.6 - உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஏறக்குறையை 28 ஆண்டுகளுக்குப்பிறகு உலகக் கோப்பையை வென்ற தோனி தலைமையிலான இந்திய அணிக்கு ரூ.3 கோடியும், அதில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் ஆர்.அஸ்வினுக்கு ரூ.1 கோடியும் தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் கருணாநிதி நேற்று வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அண்மையில் மும்பையில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி மிகச் சிறப்பாக விளையாடி, இலங்கை அணியை வென்று, 28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையை மீண்டும் கைப்பற்றி மகத்தான சாதனை படைத்தது. இச்சாதனையைப் போற்றிப் பாராட்டும்வகையில், இந்தியக் கிரிக்கெட் அணிக்குத் தமிழக அரசின் சார்பில் 3 கோடி ரூபாய் சிறப்புப் பரிசும், இந்திய கிரிக்கெட் அணியில் பங்கு பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர், சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வினுக்கு  ஒரு கோடி ரூபாய் சிறப்புப் பரிசும் வழங்கப்படும் என முதலமைச்சர் கருணாநிதி  ஏற்கனவே அறிவித்திருந்தார். 

அந்த அறிவிப்பின்படி, உலகக் கோப்பையை வென்று நம் நாட்டிற்குப் புகழ்தேடித் தந்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களுக்குத் தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட ரூபாய் 3 கோடியைச் சமமாகப் பிரித்து வழங்கிட முடிவு செய்து ​ அணியின் தலைவர் எம்.எஸ். தோனி,  சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கு தலா 21 இலட்சத்து 42 ஆயிரத்து 857 ரூபாய்க்கான காசோலைகளையும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கெளரவச் செயலாள  என். சீனிவாசனிடம்  அணியின் ஏனைய வீரர்களுக்கான காசோலைகளையும், இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றிருந்த தமிழக வீரர் ஆர். அஸ்வினிடம் 1 கோடி ரூபாய்க்கான காசோலையையும் முதலமைச்சர் கருணாநிதி  இன்று (நேற்று) தலைமைச் செயலகத்தில் நேரில் வழங்கி அவர்களை வாழ்த்திப் பாராட்டினார். 

இந்நிகழ்வின்போது, நிதியமைச்சர் க. அன்பழகன், தமிழக துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி எஸ். ஆறுமுகம், சட்டம் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் துரைமுருகன், உயர் கல்வித் துறை அமைச்சர்  க. பொன்முடி, உணவுத் துறை அமைச்சர்  எ.வ. வேலு, சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், அரசு தலைமை வழக்கறிஞர்  பி.எஸ். ராமன், தலைமைச் செயலாளர் எஸ்.மாலதி, நிதித்துறை முதன்மைச் செயலாளர் க.சண்முகம்,  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை முதன்மைச் செயலாளர் க. முத்துசாமி,  தமிழ்நாடு கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கெளரவச் செயலாளர் கே.எஸ். விசுவநாதன் ஆகியோர் உடனிருந்தனர். இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்