முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கனிமொழி இன்று ஆஜர்

வெள்ளிக்கிழமை, 6 மே 2011      அரசியல்
Image Unavailable

புது டெல்லி,மே.6 - கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி கைமாறிய விவகாரம் தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்டதை அடுத்து தமிழக முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி எம்.பி. இன்று சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜராகிறார். 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடந்தது தெரிந்ததே. இந்த ஊழலால் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு கொஞ்சம் நஞ்சமல்ல. ரூ. 1.76 லட்சம் கோடி என்று தணிக்கை துறை அதிகாரி தெரிவித்தது தெரிந்ததே. இந்த வழக்கு தொடர்பாக இன்று 6 ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு முதல்வர் கருணாநிதியின் மகளும், மாநிலங்களவை தி.மு.க. எம்.பியுமான கனிமொழிக்கு மத்திய புலனாய்வு துறையை போல, அமலாக்கத்துறையும் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் மேலும் 4 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கனிமொழி எம்.பி. இன்று ஆஜராகிறார். இதற்காக நேற்று முன்தினமே அவர் டெல்லி புறப்பட்டு சென்றார். இன்று ஆஜரான பிறகு அவர் கைதாகக் கூடும் என்று பரவலாக பேசப்படுகிறது. 

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தொடர்புடைய கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார், ஸ்வான் டெலிகாம் மேம்பாட்டாளர் உஸ்மான் பல்வாவின் சகோதரர் ஆசிப் பல்வா, குசேகாவோன் பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறுவனத்தின் இயக்குனர் ராஜீவ் அகர்வால், சினியுக் நிறுவன இயக்குனர் கரீம் மொராணி ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த சம்மன்கள் அனுப்பப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

பணப் பரிவர்த்தனைகள், வருவாய் ஆதாரங்கள், சொத்துக்கள் பற்றிய ஆவணங்களையும் கனிமொழி உள்ளிட்டோரிடம் அமலாக்கத்துறை கேட்டுள்ளனர். 

2 ஜி ஒதுக்கீட்டால் முறைகேடாக லாபமடைந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் டி.பி. ரியாலிட்டி நிறுவனத்திடம் இருந்து சினியுக் நிறுவனத்தின் வழியாக கலைஞர் டி.விக்கு ரூ. 214 கோடி பணம் கைமாறியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கலைஞர் டி.வியில் தலா 20 சதவீத பங்குகளை வைத்திருக்கும் கனிமொழி, சரத்குமார் ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரிப்பார்கள் எனத் தெரிகிறது. 

இந்த வழக்கை ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் சி.பி.ஐ. அமைப்பும் விசாரித்து வருகிறது. 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டால் நாட்டுக்கு ரூ. 30,984 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக தனது முதல் குற்றப்பத்திரிக்கையில் கூறிய சி.பி.ஐ., முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, தொலைத்தொடர்பு துறை முன்னாள் செயலாளர் சித்தார்த்த பெகுரா, ராசாவின் தனிச் செயலர் சந்தோலியா உள்ளிட்டோர் மீதும் ரிலையன்ஸ் டெலிகாம் ஆகிய நிறுவனங்கள் மீதும் குற்றம் சாட்டியிருக்கிறது. இதன் பிறகு கடந்த ஏப்ரல் 25 ம் தேதி தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிக்கையில் 2 ஜி முறைகேடு தொடர்பான சதியில் உடந்தையாக இருந்ததாக கனிமொழி மீது சி.பி.ஐ. குற்றம் சாட்டியது. சரத்குமார், மொரானி உள்ளிட்ட 5 பேரின் பெயர்களும் துணை குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற்றிருந்தன. 

இவர்கள் 5 பேரும் 6 ம் தேதியன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்ப சி.பி.ஐ. நீதிபதி ஓ.பி. சைனி அப்போது உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் இவர்கள் 5 பேருக்கும் அமலாக்கத்துறையும் சம்மன் அனுப்பி உள்ளது. ஒரு வேளை இவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு அதனால் இவர்கள் கைதாகி சிறையில் அடைக்கப்படும் பட்சத்தில் இவர்களிடம் ஆய்வு செய்வதற்கு அமலாக்கத்துறை கோர்ட்டில் அனுமதி கோரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் முன் ஜாமீன் கோரி சினியுக் நிறுவன இயக்குனர் மொரானி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க டெல்லி ஐகோர்ட் மறுத்து விட்டது. விசாரணை நீதிமன்றத்திலேயே இந்த மனுவை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. 

இதற்கிடையில் அரசியல் தரகர் நீரா ராடியா சார்பாக அமலாக்கப் பிரிவு அதிகாரி ஒருவருக்கு பத்திரிக்கையாளர் ஒருவர் லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாகவும் மத்திய புலனாய்வு துறை பூர்வாங்க விசாரணையை தொடங்கியிருக்கிறது. ஆனால் பத்திரிக்கையாளர் உபேந்திரா ராயும், நீரா ராடியாவும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். ஆனால் அமலாக்கப்பிரிவு துறையோ இது தொடர்பாக சி.பி.ஐ. யில் ஒரு புகார் கொடுத்துள்ளது. இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்றும் அது கேட்டுள்ளது. முன்னதாக பத்திரிக்கையாளர் உபேந்திரா ராய், அமலாக்கப் பிரிவின் உதவி இயக்குனர் ராஜேஸ்வர் சிங் என்பவரை சந்தித்து அவருக்கு ரூ. 2 கோடி கொடுக்க முன்வந்தாராம். ஸ்பெக்ட்ரம் ஊழலை மறைப்பதற்காக இப்படி கொடுக்க அவர் முயன்றாராம். இது தொடர்பாகவும் விசாரணை நடக்கவிருக்கிறது. 

இந்த பரபரப்பான சூழ்நிலையில்தான் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதியின் மகள் கனிமொழி எம்.பி. இன்று சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜராகவிருக்கிறார். அப்போது கலைஞர் டி.விக்கு ரூ. 214 கோடி கைமாறிய விவகாரம் குறித்து அவரிடம் கேள்விக் கணைகள் தொடுக்கப்படும் என்று தெரிகிறது. ஆனால் கருணாநிதியின் மகள் கனிமொழியோ நான் நிரபராதி என்று நிரூபிப்பேன் என்று கூறியிருக்கிறார். இன்று ஆஜரான பிறகு அவர் கைது செய்யப்படுவாரா அல்லது மாட்டாரா என்பது தெரிந்து விடும். இந்த கேள்விக்கு விடை காண தமிழக மக்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். ஆனால் தி.மு.க.வோ கலக்கத்துடன் காணப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கனிமொழிக்காக பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி ஆஜராவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த விவகாரம் குறித்து சட்ட நிபுணர்களோடு தமிழக முதல்வர் ஆலோசனை நடத்தினாராம். அப்போது சட்ட நிபுணர்களும் சில அரசியல் தலைவர்களும் அவருக்கு ஆறுதலான வார்த்தைகளை கூறியதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்