முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.ஏ.சி: நடவடிக்கை அறிக்கையை அளிக்க வேண்டும்: ஜோஷி வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 9 மே 2011      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா,மே.- 9 - 2 ஜி அலைக்கற்றை தொடர்பாக நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு தயாரித்திருக்கும் வரைவு அறிக்கை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கையை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்று அக்குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷி வலியுறுத்தி உள்ளார்.  பி.ஏ.சி. அறிக்கையின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக உள்ளது. மக்களவை தலைவரின் பரிசீலனையில் இருக்கும் இந்த அறிக்கை மக்களவையில் தாக்கல் செய்யப்படும். அதன் பிறகு அறிக்கை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை அரசு அளிக்க வேண்டும் என்று அவர் கூறினார். 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டால் நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக சி.ஏ.ஜி. அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் பி.ஏ.சி விசாரித்து வந்தது. பல்வேறு உயர் அதிகாரிகளையும் விசாரித்த பின் வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டது. ஆனால் இதற்கு குழுவில் இருந்த காங்கிரஸ், தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே பதவிக் காலத்தின் கடைசி நாளான ஏப்ரல் 30 ம் தேதி வரை இந்த அறிக்கை இறுதி செய்யப்படவில்லை.
இதையடுத்து அந்த அறிக்கையை மக்களவை தலைவர் மீராகுமாரிடம் ஜோஷி தாக்கல் செய்தார். இப்போது புதிய பி.ஏ.சி. பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கும் ஜோஷியே தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் கொல்கத்தாவில் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், பி.ஏ.சியின் வரைவு அறிக்கை பெரும்பான்மை உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்டது என்று கூறப்படுவதை மறுத்தார். கூட்டம் ஒத்தி வைக்கப்பட்ட பிறகு பிரதமர் மீதும் உள்துறை அமைச்சர் மீதும் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டிருப்பதை சில உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.
மேலும் பி.ஏ.சி. கூட்டத்திற்கு சைபுதீன் சோஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது விதிகளுக்கு புறம்பானது. மாநிலங்களவை உறுப்பினர் ஒருவர் பி.ஏ.சிக்கு தலைவராக இருக்க முடியாது. பி.ஏ.சியில் இருந்து யஷ்வந்த்சின்காவை நீக்க வேண்டும் என்று கோரினார்கள். புதிய பி.ஏ.சியில் அவர் இடம் பெறவில்லை. 2 ஜி அலைக்கற்றை ஊழலில் பிரதமர் ஒரு மவுன சாட்சியாக இருந்திருக்கிறார். அப்போது நிதியமைச்சராக இருந்த சிதம்பரம் ஊழலை தடுப்பதற்கு தாம் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யவில்லை என்றார் ஜோஷி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்